Devanayapavanar and Veeramamunivar awards for Tamil scholars!

தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. அந்தவகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் ஆகிய தமிழ்ச்சான்றோர் பெயர்களில் விருதுகள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் தகுதிவாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞர் ஒருவருக்குத் “தேவநேயப் பாவாணர் விருது’ வழங்கப்படவுள்ளது.

வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கியும் தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதிவாய்ந்த ஒருவருக்கு “வீரமாமுனிவர் விருது” வழங்கப்படவுள்ளது. இவ்விரு விருதுகளும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும்.

தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை.காம் (www.sorkuvai.com) வலைத்தளத்திலுள்ள அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி 31/08/2021க்குள் இவ்வியக்ககத்திற்குக் கிடைக்குமாறு, “இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலகக் கட்டடம், முதல்தளம் எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-600 028” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்துடன் தங்கள் நாட்டைச் சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அகராதியியல் வல்லுநர் ஒருவர் என இருவரின் பரிந்துரைச் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். பரிந்துரைப்பவர்களின் தன்விவரக் குறிப்பினையும் ஒளிப்படத்துடன் (Photo) இணைத்தனுப்ப வேண்டும். விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்படும் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக உரூபா ஓர் இலக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!