Elocution competitions for school and college students on the occasion of Gandhi and Nehru’s birth anniversary; Perambalur Collector Information!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021 -2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பின்படி, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 02-ஆம் நாள் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி டிசம்பர் 03 அன்றும், நவம்பர் 14-ஆம் நாள் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 04 அன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளது. தற்போது கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் 2024 டிசம்பர் மாதம் போட்டிகள் நடைபெறும்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி 03-12-2024 அன்று செவ்வாய் கிழமையும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு 04-12-2024 அன்று புதன் கிழமையும் பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்கப்பட உள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000/- வீதம் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியானது காலை 9.00 மணிக்குத் தொடங்கப்படும்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!