“Expel to a foreign state! Bring in the pass system! ” TTP Protest Announcement in Aavadi!
தமிழர் தேசிய பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“வெளி மாநிலத்தவரை வெளியேற்று! உள் அனுமதிச்சீட்டுமுறை கொண்டு வா!” என வலியுறுத்தி, சென்னை – ஆவடியில் வரும் 19.04.2022 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 06.04.2022 – ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022 – பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர்.
இவ்வாறு, மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள வடமாநிலத்தினர் தமிழ்நாட்டில் இதுபோல் தாக்குதல்களில் ஈடுபடுவதும், கொலை – கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டின் தொழில் வணிகத்தை மார்வாடி – குசராத்தி – தெலுங்கர் – மலையாளிகள் எனப் பலதரப்பினரும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இன்னொருபுறத்தில், ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலை, படை உடைத் தொழிற்சாலை தொடங்கி தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் – தொழிலகங்கள் – தொடர்வண்டி நிலையங்கள் – வங்கிகள் என அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரே நிறைந்துள்ளனர். சித்தாள் போன்ற அடிமட்ட பணிகளிலும் வடமாநிலத்தவரே நிறைந்துள்ளனர்.
இந்த அநீதியைத் தடுக்க – தமிழ்நாடு – மாநிலமாக அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும், தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்கக் கூடாது, நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல் வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய உள் அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit System) கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஆவடியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வரும் 19.04.2022 காலை 10.30 மணிக்கு, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு முன்பு) நடைபெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமை தாங்குகிறார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் திரு. இடும்பாவனம் கார்த்திக், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ஆவடி த.தே.பே. தோழர் கோ. சதீஷ்பரணி, த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. டேவிட், தென்சென்னை செயலாளர் தோழர் ஏ. பிரகாசுபாரதி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். மகளிர் ஆயம் தோழர் மாதவி நன்றியுரையாற்றுகிறார்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.