Perambalur: A woman who couldn’t bear the shame of a financial institution employee sitting at her house asking for installments committed suicide by hanging herself!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ராணி (வயது 40). இவர், பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள ஆர்.பி.எல் பிரைவேட் பேங்கில் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், தொடர்ந்து 4 மாதங்கள் கட்டியும் வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் பணம் கட்டாததால், பேங்கிலிருந்து வசூலுக்கு வந்த சரவணன் என்பவர் ராணியின் செல்போனை பிடுங்கி சென்று விட்டதாகவும் பணம் கட்டிய பின் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நடப்பு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கட்ட வேண்டிய தவணைத் தொகைக்கு, பேங்கிலிருந்து வந்த சரவணன் என்பவர் ராணி வீட்டிற்கு வந்து நேற்று காலை 8 மணிக்கே வந்து பணம் கேட்டுள்ளார் . அதற்கு ராணி இன்று மாலை பணம் கட்டி விடுவேன் என்று கூறியதாக தெரிகிறது. மீண்டும் நேற்று மதியம் 2 மணி அளவில் ராணி வீட்டிற்கு வந்த சரவணன் பணம் கேட்டு வீட்டிலேயே அமர்ந்து உள்ளார்.
இதனால், அவமானம் தாங்க முடியாத ராணி நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் பார்த்து ஊர்க்காரர்கள் சிலர் ஒன்று கூடி ராணியை தூக்கில் இருந்து இறக்கி ஆட்டோவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், நடத்திய விசாரணையில் நிதி நிறுவன ஊழியரான பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான் பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சரவணன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 108 BNS Act (306 இந்திய தண்டனைச் சட்டம்) வழக்கு பதிவு செய்து மேலும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன வசூல் ஏஜெண்டுகள் தொடர்ந்து இதுபோன்று வீடுகளில் ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து அமர்ந்திருப்பதால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளவதனால் இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மாலைக்குள் பணம் கட்டுவதற்குள் வீட்டிலேயே நிதி நிறுவன ஊழியர் தங்கி இருந்ததால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராணி உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்,