Perambalur becomes a murderous city! DMK agitating for police action?

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலை, கொள்ளைகளால் மாவட்ட மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். கொலைக்கு காரணமானவர்களை காவல்துறை கைது செய்து உடணடியாக நடவடிக்கை எடுக்காததால் பெரம்பலூர் கொலை நகரமாக மாறி வருகிறது எனவும் மாவட்டத்தில் காவல்துறை செயல்படுகிறதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக மாவட்ட செயலாளர் சி. இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலம் பகுதியின் கீழ் முகவரி தெரியாத ராஜா என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரை கொலை செய்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தெரணி கிராமத்தில் பால் வியாபாரி மணி என்பவரை 4 பேர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். துறைமங்கலம் பகுதியில் கபிலன் என்பவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அ.ம.மு.க. பிரமுகர் பாண்டி (எ) வல்லத்தரசு என்பவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமணி என்பவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். புதிய நபர்கள் நிறைய பேர் பயங்கரமான ஆயுதங்களுடன் பயமில்லாமல் நகரில் உலா வருகின்றனர். இவர்கள் மீது கொலை , வழிப்பறி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 1 வாரத்தில் இப்படி தொடர்ந்து 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் மர்மமான முறையிலும் இறந்துள்ளனர்.

பெரம்பலூர் எளம்பலூர் சாலை, துறையூர் சாலையில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் நிறைய பொருட்கள் திருட்டு போயுள்ளது. இந்த கொலை, மர்ம மரணம் மற்றும் திருட்டு சம்பவங்களில் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் கொலை, கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நிம்மதியிழந்து வருகின்றனர். பெரம்பலூர் கொலை நகரமாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வின் வழிகாட்டுதல்படி தி.மு.க.சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!