Perambalur: Collector and MLA distributed vegetable seed packages in Kurumbalur under the “Nutritional Agriculture Movement” project!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, வேளாண்மை – உழவர் நலத் துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை நேற்று வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ச.அருண்ராஜ் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாபரன் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகளை வழங்கினர்.
பின்னர், 2025-26 ஆம் ஆண்டிற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன் பெறும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், விவசாய பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பூச்சிக்கொல்லி தொடர்பான விழிப்புணர்வு நாட்காட்டியினை வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினர்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ள 4 வட்டங்களைச் சேர்ந்த 15,250 குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைத்திடவும் அன்றாட காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.60 மதிப்பில் (தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள்) 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ.9,15,000 மதிப்பீட்டில் நூறு சதவீத மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
மேலும், மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பயனளிக்கும் வகையில், ரூ.100 மதிப்பீட்டில் (பப்பாளி, கொய்யா, எலுமிச்சை) 3 வகையான பழச் செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்புகள் 9,400 குடும்பங்களுக்கு ரூ.9,40,000 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. மேலும் புரதச்சத்து நிறைந்த துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் இல்லம் தோறும் வளர்க்கும் பொருட்டு பயறு விதைகள் அடங்கிய 2,000 தொகுப்பு ரூ.1,34,000 மதிப்பீட்டில் 100% மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மு.சத்தியா, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர்கள் செல்வபிரியா, செல்வகுமாரி மற்றும் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.