Perambalur: Collector orders removal of all flagpoles installed in public places!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்தது.

அதில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 12 வார காலத்திற்குள் அதாவது 27.04.2025 அன்றைக்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு அகற்றிக் கொள்ள தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் 2 வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிட்டு, கொடிக்கம்பங்களை அகற்றப்படும். மேலும் துறை மூலம் அகற்றிட ஏற்படும் செலவை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம் அல்லது எந்த ஒரு சங்கம் போன்ற அமைப்புகள் நிரந்தரமாக கொடிக் கம்பங்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனுமதி வழங்கக் கூடாது.

அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் தங்கள் சொந்த நிலத்தில் நிரந்தரக் கொடிக் கம்பங்களை உரிய துறையிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பிறகு நிறுவிக்கொள்ள அனுமதிக்கப்படும். அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரம், மாநாடுகள், ஊர்வலம், தர்ணா மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் போது, சட்டத்தின்படி, உரிய வாடகை செலுத்தும் பட்சத்தில், நிலத்திற்கு சேதம் விளைவிக்காமல், தற்காலிகமாக கொடிக்கம்பங்களை அமைக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனுமதிக்கலாம்.

தற்காலிகக் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி / உரிமம் வழங்கப்பட்ட காலத்திற்குப் பிறகு, அனுமதி / உரிமம் பெற்றவர், பொது இடங்களைச் சுத்தப்படுத்தி, துளைகள் இருப்பின் அவற்றை அதன் அசல் நிலைக்குத் திரும்பச் செய்திட வேண்டும் என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் செலுத்த வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா, துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!