Perambalur: Farmers protest with black flags against the municipality!
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் சிலையை இடமாற்றம் செய்யும் பெரம்பலூர் நகராட்சி தீர்மானத்தை கைவிட வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில் இன்று காலை விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியுடன், கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, ஜப்தி ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசிடம் இருந்து பெற்றுத் தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தையும் நினைவையும் போற்றும் வகையில், அவரது முழு உருவச்சிலை அமைத்திட பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் அனுமதி கோரி அப்போதைய பெரம்பலூர் பேரூராட்சியிடம் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பேரூராட்சி தீர்மான எண்.264/29-01-1998ன்படி அனுமதி வழங்கப்பட்டு உரிய கட்டணம் ரூ.10,000/- செலுத்தப்பட்டு சிலை 27.02.1998 அன்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டது.
சிலையானது அமைக்கப்படும் போதே அப்போதைய பேரூராட்சியால் அனுமதி அளித்த இடமான புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் இடதுபுறத்தில் ஓரமாக போக்குவரத்திற்கு எந்தவித இடையூறு இன்றியே அமைக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள பகுதியில் இதுவரை எந்தவித விபத்துக்களோ அல்லது சிலையினால் போக்குவரத்துக்கு இடையூறு என எந்த பிரச்சனையும் எழவில்லை. சிலை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் எவ்வித பிரச்சனையுமின்றி கடந்து விட்ட நிலையில் 31.12.2024 அன்று நடைப்பெற்ற பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தில் நாராயணசாமி நாயுடு சிலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகவும், அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைப்பெறுவதாகவும்அதனால் சிலையை அங்கிருந்து இடமாற்றம் செய்திட தீர்மான எண்.6/31.12.2024 நிறைவேற்றியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மைக்கு புறம்பான காரணங்களைக் கூறி சிலையை இடமாற்றம் செய்திடும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என்றும்,
சிலை பைபர் பிளாஸ்டிக் மூலப் பொருளால் செய்யப்பட்டுள்ளது. அதை இடமாற்றம் செய்தால் சிலை முற்றிலும் சேதமடைந்து விடும். எனவே சிலையை இடமாற்றம் செய்திட சாத்தியமில்லை. எனவே, சிலையை இடமாற்றம் செய்திடும் முடிவை கைவிட்டு, சிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்க பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கோரிக்கைகளை முன்வைத்து மனுவை கலெக்டர் கிரேஸிடம் கொடுத்தனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் வி.நீலகண்டன், பெரம்பலூர் மாவட்டப் பொருளாளர் மணி, திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை, திருச்சி மாவட்ட செயலாளர் என்.கணேசன், அரியலூர் மாவட்ட தலைவர் வி.விஸ்வநாதன், உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.