Perambalur: NTK Chief Coordinator Seeman Canvasses for Candidates in the Kunnam Constituency!

பெரம்பலூர், குன்னம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யா மற்றும் கீர்த்திவாசனை ஆதரித்து இன்று பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:வீரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
​நாம் முற்றுமுழுதாக ஒரு புதிய அரசியலை இந்த மண்ணில் கட்டி எழுப்பி, ஒரு தூய ஆட்சியை நிறுவச் செய்ய வேண்டும், அமையச் செய்ய வேண்டும் என்பது, என் பிள்ளைகள் எங்களுடைய கனவு மட்டுமல்ல; நீண்ட காலமாக நமது முன்னவர்கள் தூக்கிச் சுமந்து வந்த ஒரு பெருங்கனவு.

​குறிப்பாக நம்முடைய புரட்சிப் பாவலர், பாவேந்தர் பாரதிதாசன்: “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சிப் பொங்கிடுக, வாய்மை பொழிந்திட, செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயோ” ​என்கிறான். “என் நாட்டில் என் ஆட்சி” என்று அவன் பாடவில்லை; “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி” என்று பாடுகிறான். ​”அலைமாகடல் நிலம் வாழி உன் அணிமாளிகை ரதமே, அவை ஏறிடும் விதமே, உனது அதிகாரம் நிறுவுவாய்”

​அவன் கரையில மட்டும் இல்ல; கடல்ல, ஆகாயத்துல எல்லாத்துலயும் உன் அதிகாரத்தை நிறுவுடா என்கிறான். அப்படி நிறுவியவர்கள் நம்முடைய முன்னவர்கள் அருண்மொழிச் சோழனும், அவன் மகன் இராசேந்திரனும் தரையில் மட்டுமல்லாமல் அலைமாகடலிலும் தன் அதிகாரத்தை நிறுவினார்கள்.

​ஏனென்றால் இந்தியப் பெருநிலத்திலேயே முதன்முதலாக கடற்படை கண்டவர்கள் நம்முடைய பாட்டன்கள்தான். ஆனால் அவன் பேரன், எங்கள் தலைவர் பிரபாகரன்தான் வானிலும் அதிகாரத்தை நிறுவியவன். விண்படை கண்டு, “அலைமாகடல் நிலம் வானில் உன் அதிகாரத்தை நிறுவு” என்பதற்கு ஏற்ப, அங்கு வானத்திலும் விண்ணிலும் தன் அதிகாரத்தை நிறுவியவன் எங்கள் உயிர் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

​அந்த வழி வழி வந்த பிள்ளைகள், “இதிலே உன் அதிகாரத்தை நிறுவ ஏதாவது இடையூறு வருதா?” ​”கொலை வாளினை எடடா, மிகக் கொடியோர் செயல் அறவே, குகைவாழ் ஒரு புலியே, உயர்குணமே வியத் தமிழா” ​என்று நம்முடைய புரட்சிப் பாவலர் பாடுகிறார். சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தோம். செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம். பொங்கும் உணர்வில் எழும் தமிழரசு போர் தொடங்கிட்டு கொட்டடா முரசம் என்கிறான்.

​”நறுக்குவோம் பகையின் வேர், சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்” என்கிறான். குறுக்கில் முளைத்திட்ட இந்த அயலார் ஆட்சி கூண்டோட போயிட்டு கொட்டடா முரசம் என்கிறான். அடிமை இந்தியாவில் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பாட்டை நம்முடைய பாவலர், புரட்சிப் பாவலர் பாடியிருந்தால் அது வெள்ளைக்காரனை எதிர்த்து என்று பொருள்.

​ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், “நறுக்குவோம் பகையின் வேர், சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்” என்கிறான். இந்தத் திருட்டு திராவிடக் கூட்டத்தை ஒழியடா என்கிறான். “நறுமலச் சோலையில் நரி புக விடமாட்டோம்” – எந்த நரி? திராவிட நரி.

கண்டு புகுந்த அயர்வன் ஆட்சி வேரற்று போயிட்டு கொட்டடா முரசம். இது போர்! அநீதிக்கும் அறத்திற்குமான போர். பன்னெடுங்காலமாக கட்டமைக்கப்பட்ட அநீதியான ஆட்சி முறைக்கும், தமிழர் மரபு சார்ந்து அறம் சார்ந்து வாழ்ந்து நின்ற மறவர்களின் பிள்ளைகள் அந்த அறம் சார்ந்த ஆட்சி…

​’அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்றான் எங்கள் முன்னவன் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலே. எப்படிப்பட்ட பெருமைமிக்க இனம்! ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள… வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசையாண்ட தென்னவன் வாழி’ என்கிறான். இப்படிப்பட்ட பெருமை கொண்ட இனம், சொந்த மண்ணை ஆள துப்பில்லாமல் வந்தவன் போனவன்ட்ட நாட்டை கொடுத்துட்டு, நாலு மூணு சீட்டுக்கு கைகட்டி நிற்பது கேவலம். இது என் நாடு, இது என் மக்கள், என் நிலம், என் உரிமை – அந்த உணர்வு ஒவ்வொரு மகனுக்கும் எழணும்.

​ஒரு தூய தமிழ் மகன் இந்த மண்ணை, மக்களைப் பேருவகை கொண்டு காதலிக்கிற ஒருவன் ஆட்சி இருந்தால், என் அன்னை தமிழ் இப்படி அழிக்கப்பட்டிருப்பாளா? இன்னைக்குத் தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லைங்கிறான். எப்படிச் சொல்றான்? ‘மனக்கவருந் தென்றலிலே குளிராயில்லை… அது தன் தன்மையோடு இருக்கு, குளிரு இருக்கு. தோப்பில் நிழலாயில்லை… அது இருக்குது. ஆனால், தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாடுறான்.

​ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் பெயர் பலகையை என் அன்புத் தம்பிகளே பாருங்கள். எழுத்து தமிழாக இருக்கும், ஆனால் உச்சரிப்பு ஆங்கிலமாக இருக்கும். எழுத்து ஆங்கிலமாக இருக்கும், ஆனால் உச்சரிப்பு தமிழாக இருக்கும். இதுதான் திராவிடர்கள் நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இருமொழிக் கொள்கை.

​உன் மொழியை, உன் அன்னை தமிழை ‘அவ்வையே! உன் தமிழள்ளிப் பருகவே நான் வந்தேன்’ என்று நம்முடைய முருகப் பெருமான், நம் மூதாதை, நம் முன்னவன், நம் முப்பாட்டன் முருகன் அள்ளிப் பருகிய தமிழ் அழிந்து போனது. ‘நக்கீரா! உன் தமிழோடு சற்று விளையாடவே நான் வந்தேன்… மணிநற்றி உமிழ்சங்கத் தழற்புரைச் சுடர்க்கடவுள் தந்த தமிழ்’ என்கிறான். சிவபெருமானே தந்த தமிழ் என்கிறான். எல்லா மொழியும் மனிதனால் பேசப்பட்டது, உன் மொழி என் மொழிதான் உலகில் இறைவனால் பேசப்பட்டது.

​சில மொழிகள் பிறந்து சிறக்கும், என் மொழி சிறந்தே பிறந்தது. ஏன்? அது இயற்கையின் மொழி, இறைவனின் மொழி. என் அன்புப் பிள்ளைகளே! எங்கேயாவது உன் தாய்மொழி இருக்கிறதா பார்… படித்துப் பார்…

​அப்படியே ஆங்கிலத்தைத் தமிழில் தமிழ் எழுத்தில் எழுதுவார்கள், அப்படியே தமிழை ஆங்கில எழுத்தில் எழுதுவார்கள். இதுதான் தமிழ்கிளம். அவர்கள் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து கன்னடரானார்கள் 1800 ஆண்டுகளுக்கு முன்னாடி. அவர்கள் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து தெலுங்கரானார்கள் 1600-லே. தமிழோடு சமஸ்கிருதம் கலந்து 15-ஆம் நூற்றாண்டிலே மலையாளியானார்கள். அதன் பின் துளுவரானார்கள். இப்போ நாம் தமிழோடு ஆங்கிலம் கலந்து… எப்படி கலந்தோம் தமிழோடு சமஸ்கிருதம்?

​வணக்கம் – நமஸ்காரம், சோறு – சாதம், மகிழ்ச்சி – சந்தோஷம்… இப்படிப் பேசிச் செத்தோம்.” தமிழ் சிதைந்தது. இப்போது 100-க்கு 99 விழுக்காடு ஆங்கிலம் கலந்து பேசுகிறோம். ‘திங்க் (Think)’ பண்ணி, ‘பீல் (Feel)’ பண்ணி, ‘வொர்க் (Work)’ பண்ணி இப்படி அன்னிப் பண்ணியாகப் (Funny) பேசி நம் அருமைத் தாய்மொழியைப் பன்னி மொழியாக ஆக்கி நிறுத்திவிட்டோம். இதைப் படித்துப் பாரு… ஏதாவது ஒரு இடத்துல ‘ஜி மெடிக்கல்ஸ்’, ‘டிஜிட்டல் மொபைல்ஸ்’… இதாண்டா தமிழீழம்.

​உன் தாய் வன்புணர்வு செய்யப்பட்டு, சேலை சட்டையெல்லாம் கிழித்துவிட்டுப் பைத்தியம் போல அலைய விட்டுருக்காங்களே… எவனாவது இங்க கோபப்பட்டிருக்கீயா? 50,000 ஆண்டுகளுக்கு மூத்த ஒரு தேச இனத்தின் பிள்ளை நீ. உன் தாய்மொழி, உன் மொழிதானடா உன் முகம், உன் மொழிதானடா உன் அடையாளம், உன் மொழிதானடா உன் முகவரி.

​நான் யாரடா? நான் யார்? வன்னியனா, கவுண்டனா, யார்? பறையனா, நாடாரா, செட்டியாரா, கோனாரா, பிள்ளையா, முதலியாரா, உடையாரா? யார் நான் யார்? நான் இந்துவா, நான் முஸ்லிமா, கிறித்தவனா? இதுவா என் அடையாளம்?.

​இந்த மாநிலத்தை விட்டு கேரளா செல், நீ யார் என்று கேட்பான். ‘நான் இந்து’ என்று சொல்வியா? ‘நான் இஸ்லாம்’ என்று சொல்வியா? இஸ்லாம் என்று தெரிந்தும் கேட்பான்டா நீ யாரென்று. இந்து என்றும் தெரிந்தும் கேட்பான் நீ யாரென்று. கிறித்தவன் என்று தெரிந்தும் கேட்பான் நீ யாரென்று. அப்ப என்ன சொல்வாய்?.

​நீ போ பிரிட்டனுக்குப் போ… ‘ஐ அம் பிரிட்டிஷ்’ கிடையாது, ‘ஐ அம் கிறிஸ்டியன்’ கிடையாது, ‘ஐ அம் இங்கிலீஷ்’ – அதாண்டா அடையாளம்!. போ பிரான்சுக்குப் போ… ‘ஐ அம் பிரான்ஸ்’ கிடையாது, ‘ஐ அம் கிறிஸ்டியன்’ கிடையாது, ‘ஐ அம் பிரெஞ்ச்’ – அப்படித்தான் கைகுலுப்பான்.

​இப்போ நான் யார்? எந்த மாநிலத்துக்குப் போனாலும் நான் தமிழன்! இந்த நாட்டை விட்டு எந்த நாட்டுக்குப் போனாலும் நான் இந்துவோ, இஸ்லாமியனோ, கிறித்தவனோ கிடையாது; நான் நாடாரோ, கோனாரோ, தேவரோ, செட்டியாரோ, வன்னியரோ, கவுண்டரோ, பறையரோ, தேவேந்திரரோ கிடையாது. நான் யார்? பிறப்பிலிருந்து இறப்பு வரை நான் எங்கு சென்றாலும் தமிழன்! அதாண்டா அடையாளம், உலகம் முழுமைக்குமான அடையாளம்.

​மஹ்மூத் தர்வீஷ் சொல்றார்ல… ‘எழுதுங்கள் என் நெற்றியில் நான் இஸ்லாமியன் என்று’ என்று சொல்லல; ‘எழுதுங்கள் என் நெற்றியில் நான் அரேபியன் என்று’ அப்படித்தான் சொன்னான். நல்லாப் புரிஞ்சிக்க… ‘நாளை என் மார்க்கம் அழிந்துவிடுமானால் அதைக் கேட்டு நான் இருக்கமாட்டேன் இன்றே இறந்துவிடுவேன்’ என்று அவார் மொழி கவிஞர் ரசூல் கம்சதோவ் சொல்லல; ‘நாளை என் தாய்மொழி அவார் மொழி அழிந்துவிடுமானால் அதைக் கேட்டு நான் இருக்கமாட்டேன் இன்னைக்கே செத்துப் போயிருவேன்’ என்கிறான்.

​உன் மொழி செத்துப் போச்சு… ஆனா வாழ்ந்துட்டு இருக்க. உனக்குத் தமிழ் பேச வரல, எழுத வரல, படிக்க வரல. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று முழக்கமிட்டவர்கள், ‘எங்கே தமிழ்’ என்று கேட்க வைத்திருக்கிறார்கள்.

​’வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று முழக்கமிட்டவர்கள், இன்று ‘வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும்’ என்று மாற்றி நிறுத்திவிட்டார்கள்.

​உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கிற பொறுப்பும் கடமையும் என் முன்னால் நிற்கிறவர்கள் அல்ல… உலகத்துக்கே இருக்கிற என் உயிர் சொந்தங்கள், உங்கள் பிள்ளைகள் பேசுகிற இந்தப் பேச்சில் இருக்கிற உயிர்ப்பையும் உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்… சத்தியத்தை நீங்கள் புரியணும். உங்கள் பிள்ளைகள் ஒன்றிலிருந்து தொடங்கவில்லை, பூஜ்யத்திலிருந்து…”.

அன்பு போற்றும் என் அன்னை தமிழை மீட்புருவாக்கம் செய்து, நாங்கள் தமிழர்கள்! இது பெயரில் மட்டும் தமிழ்நாடு, தமிழுக்கும் தமிழனுக்கும் சுடுகாடு. அதை மாற்றி உண்மையிலேயே தமிழர் நாடாக எங்கும் தமிழ், எதிலும் தமிழ், தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ் என்ற நிலையை உங்கள் பிள்ளைகள் உருவாக்குவோம்.

​பயிற்று மொழி தமிழ், பாட மொழி ஆங்கிலம். எம்மொழியும் கற்போம் எங்கள் நாங்கள் வாழ, எங்கள் மொழி தமிழ் கற்போம் எங்கள் இனம் வாழ. இதுதான் உங்கள் பிள்ளைகளின் நிலைப்பாடும், கோட்பாடும், கொள்கை உறுதியும். இதை அன்புச் சொந்தங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

​ஒரு இனம் கண்ணு முன்னாடி தன் மொழியை சிதைந்து அழியக் கொடுத்து, தன் கலை இலக்கிய பண்பாட்டை மறந்து, தன்னுடைய வரலாற்றையும் மறந்து… வரலாற்றை மறந்துவிட்ட இனம் சுடுகாட்டில் இறந்து கிடக்கிற பிணம் என்கிறார் ஹோ சி மின்.

​வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சியுற முடியாது என்கிறார் புரட்சியாளர் லெனின். வரலாற்றைப் படிக்க முடியாதவன் வரலாற்றைப் படைக்க முடியாது என்கிறார் அறிவாசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். “வரலாற்றைப் படி, வரலாற்றைப் படை, நீ வரலாறாகவே வாழ்” என்கிறார் எங்கள் உயிர் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

​அதனால் வரலாற்றைக் கையில் எடுத்த இனங்களெல்லாம், பாதுகாத்த இனங்களெல்லாம் பத்திரமாக, பாதுகாப்பாக வாழ்கிறது என்கிறார். ஆனால் என் இனம் தன் வரலாற்றை மறந்தது, மறந்து போனது. தமிழர்கள் தங்களை யார் என்பதே தெரியாமல் மறந்து போனார்கள். அதனால் உயிரோடே இறந்து போனார்கள்.

​நாங்கள் உலகின் முதல் மொழி தமிழ், முதல் மாந்தன் தமிழன், உலகின் மூத்த குடி தமிழ்க்குடியின் பிள்ளைகள் என்பதை மறந்து போனார்கள். உலகிற்கு அறிவியல், நாகரிகம், கலை, தொழில்நுட்பம், வேளாண்மை எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த பேரினத்தின் பிள்ளைகள் என்பதை மறந்து போனார்கள், மறந்து போனார்கள்.

​கடல் பல கடந்து படை பல நடத்தி பல்வேறு நிலப்பரப்புகளை வென்று உலகின் மூன்றாவது பெரிய வல்லரசை நிறுவிய அருண்மொழிச் சோழன், அவன் மகன் இராசேந்திரனின் வாரிசுகள் என்பதை மறந்து போனார்கள், மறந்து போனார்கள். மானத்திற்காக உயிரை விட்ட இனத்தின் பிள்ளைகள் என்பதை மறந்து, அவமானச் சின்னமாக இந்த மண்ணில் அலைந்து திரிகிறார்கள்.

​கொடுத்துக் கொடுத்து வாழ்ந்த கூட்டம் இன்று ஏந்தி கையேந்தி நிற்கிறது ஆயிரம் ஐந்நூறுக்கு அரிசி பருப்புக்கு. தன்மானத்தை இழந்து மறந்து போனார்கள். மொழிப்பற்றை, இனப்பற்றை மறந்து, மொழிப் பெருமை, இனப் பெருமை மறந்து சாதி மதச் சகதிக்குள் சிக்கி இறந்தே போனார்கள், இறந்தே போனார்கள்.

​என் உயிர் சொந்தங்களே, என்னிலும் இளைய என் தம்பி தங்கைகளே, எழுச்சிகொள்ளுங்கள், எழுச்சிகொள்ளுங்கள்! உங்களுக்கு வேண்டியது உளவியல் நிமிர்பு. கைகளில் கால்களில் விலங்கு இருந்தால் வெட்டி எறியலாம், உங்கள் சிந்தனையில் உங்கள் மூளைக்கு விலங்கு. ‘நம்மால் முடியுமா?’, ‘நம்மால் சாத்தியமா?’ இப்படி இப்படி இப்படி… கூட்டம் சேர்ந்து வந்தால்தான் வெல்ல முடியும். எதற்காகக் கூட்டணி? 22 கட்சி கூட்டணி எதற்கு? எதற்கு? தி.மு.க-வின் ஆட்சி சிறப்பாக இருக்கிறதா? சிறப்பாக இருந்தால் தனித்துத் தானே நிற்க வேண்டும்?”.

இந்த நாட்டில் ஒரு அநீதியை எதிர்த்துப் பேசிய யாராவது பார்த்தீர்களா? இந்த நாட்டில் இத்தனை போராட்டங்களைத் தந்தது இந்தக் கட்சியாட்சிகள் தான். அந்தக் கட்சியோடு கூட்டணி வைச்ச கட்சிகள், மக்களின் பிரச்சனைக்கு ஓரிடத்தில் வந்து, மக்களுக்காக நின்றது உண்டா? பார்த்தது உண்டா? ஆனால் இந்த நாட்டில் எல்லாப் பிரச்சனையும் தந்தவர்கள் இந்தப் பக்கம் நிற்கிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா… எல்லாப் பிரச்சனைகளோடும் என் மக்களோடு மக்களாக நின்ற பிள்ளைகள் ஒரு பக்கம். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் – தந்தவர்கள் ஒரு பக்கம், தீர்க்க வேண்டும் என்று வந்த உங்கள் பிள்ளைகள் ஒரு பக்கம்.

​இதில் என் சொந்தங்களே, என் பெற்றோர்களே, என் உடன்பிறந்தார்களே, நீங்கள் எந்தப் பக்கம் என்பது தான் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு முன்வைக்கிற கேள்வி. மறுபடியும் மறுபடியும் பிரச்சனைகளைத் தந்தவர்களுக்கே அதிகாரத்தைக் கொடுத்தால், நாம் அறிவுள்ள, சிந்திக்கிற திறனுள்ள, பகுத்தறிகிற ஆற்றலுள்ள, தன்மானமிக்கத் தமிழினத்தின் மக்களா? அறிவார்ந்த அறிவுச் சமூகத்தின் பிள்ளைகளா? என்பதை என் அன்புப் பெற்றோர்கள், அறிவார்ந்த ஆன்றோர்கள், சான்றோர்கள், பள்ளிக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிற பிள்ளைகள் நீங்கள் உணர வேண்டும்.

​இங்கே வேட்பாளராக உங்கள் மகன் நிறுத்தி இருக்கிற பிள்ளைகளைப் பாருங்கள், யார் இவர்கள்? யார் என் தங்கை சுமதி யார்? என் தம்பி கீர்த்திவாசன் யார்? மந்திரி மகனா? முதலமைச்சர் பேரனா? யார்? ஒரு வீட்டில் ஒரு தகப்பனுக்கு மகனாகப் பிறந்ததாலேயே அவனுக்கு உயர்ந்த பதவி கிடைத்துவிடும் என்றால், இது ஜனநாயகமா? இல்லை சனாதனமா? சனாதனம், சனாதனம் எதிர்ப்பு, சனாதனத்தை ஒழிக்கிறோம் என்று பேசத் திரிகிற பெருமக்களே, பிறப்பினாலே ஒருவனுக்கு உயர்ந்த பதவி கிடைத்துவிடும் என்றால் அதுதான் சனாதனம். அதுதான் மன்னராட்சி.

​எங்கே மாண்புமிகு ஜனநாயகம்? எங்கே மக்களாட்சி? கருணாநிதி மகன் என்பதைத் தாண்டி ஐயா ஸ்டாலினுக்கு இந்த நாட்டை ஆளுகிற தகுதி ஒன்று சொல்லுங்கள்? அவருடைய மகன் என்பதைத் தாண்டி துணை முதலமைச்சராகவோ மந்திரியாகவோ தம்பி உதயநிதிக்கு ஒரு தகுதி சொல்லுங்கள்? சொல்லுங்கள்… சொல்லுங்கள்… உங்கள் மகன் சீமானுக்கு இல்லாத தகுதி அவர்களுக்கு வந்துவிட்டது என்று சொல்லுங்கள்?

​கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தால் தான் பதவி கிடைக்கும் என்றால் இது மாதிரி ஒரு கொடுமை, இது ஜனநாயக நாடா? மக்களாட்சி நாடா? சனாதனத்திற்கு அவர்கள் எதிரானவர்கள் என்றால் எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? எப்படி? இந்திரா காந்தி மகன் என்பதற்காக ராஜீவ் காந்திக்குப் பதவி, ராஜீவ் காந்தியின் மகன் என்பதற்காக, மனைவி என்பதற்காக சோனியா காந்திக்குப் பதவி, ராஜீவ் காந்தி சோனியா காந்தி மகன் மகளென்பதற்காகப் பிரியங்கா காந்திக்கு, ராகுல் காந்திக்குப் பதவி. இது என்னது இது? இவர்கள் தான் மக்களாட்சியின் காவலர்கள், மாண்புமிகு மக்களாட்சியின் மகத்தான தலைவர்கள்.

​கேவலம், வரும்போது வீதியில் வந்து சனாதனம் ஒழிப்பு, சனாதனத்தை ஒழிப்போம். அதுக்குத்தான்டா உங்களை முதல்ல ஒழிக்கணும்னு நினைக்கிறேன்… அதுக்குத்தான் உங்களை ஒழிக்கணும்னு நினைக்கிறேன்… பைத்தியக்காரி… இனி பிஜேபி வந்துடும், திமுக… ஒரு வீரம் மைந்தன் நிக்கிறேன்டா, நான் இருக்கிற வரை வராது… அப்படின்னு சொல்லுடா… சொல்லுடா அவன்கிட்ட… எப்பேர்ப்பட்ட தலைவனின் மகன் நான்? என் தலைவன் தமிழீழ நாட்டிலே தன் படையோட கையில துப்பாக்கியோட நிக்கிற போது…”

தொட்டியா? இந்த நாட்டுக்குடிகளுக்குப் பாதுகாவலனான காவல் தெய்வம்டா என் தலைவன். ஆனா அந்த இடத்துல இல்லை. 240 மீனவன் உயிரோடு இல்லை. அயோக்கியப் பயலே! சொல்லுங்கடா, ஒரு வாசல்ல வாயில் காவலன் போடுவது எதற்காக என் பெற்றோர்களே? எதுக்கு வாட்ச்மேன் போடுற? எதுக்கு வாயில் காவலன் போடுற?

​திருடன் வர்றதுக்கு முன்னாடி தடுத்து பிடிக்கவா? திருடிட்டு ஓடும்போது விரட்டி பிடிக்கவா? அல்லது திருடன் வந்துருவான், திருடன் வந்துருவான், கதவை பூட்டிக்கங்க, ஜன்னலை கூட்டிக்கங்க, நல்லா உள்ள தப்பா போட்டுக்கங்க-ன்னு சொல்றதுக்கா? இதுக்கு எதுக்குடா ஒரு வாயில் காவலன்? ஏன்? இவ்வளவு பெரிய அதிகாரத்துல இருந்த ஒருத்தரு, பிஜேபி ‘பி’ டீம், அதுல எங்க இருக்குன்னு தெரியல.

​சீட் இடம் கொடுத்துட்டாப்ல 27 சீட். நிறுத்துறதுக்கு ஆள் கிடையாது. கடைசி நேரத்துல நாளைக்கு கட்-ஆஃப் வருது, இன்னைக்கு அறிவிக்குது. பிஜேபி வரக்கூடாது, சரி. காங்கிரஸ் வரலாமா? பிஜேபியை எதிர்க்கிறதுல எப்படி காங்கிரஸ் அயோக்கியத்தனத்தை, அயோக்கிய காங்கிரஸை நீ புனிதப்படுத்துகிறாய்?

​விடுதலை பெற்ற இந்த இந்தியாவை 60 ஆண்டுகளாக ஆண்டவன் இவன். இந்த நாடு இவ்வளவு வறுமை எம்மையில் சிக்கி தவிக்க காரணமே இவன். ஜிஎஸ்டி (GST) கொண்டு வந்தது யார்? சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங். நீட்டை (NEET) திணித்தவன் யார்? என்ஐஏ (NIA), என்ஆர்சி (NRC), ஆள் தூக்கிச் சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? செயல்படுத்துறது பிஜேபி, கொண்டு வந்தது யார்? அமித் ஷா பேசுறாரே உள்துறை அமைச்சர், இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் தான் என்று பார்லிமென்ட்ல பேசுறது இருக்கா இல்லையா? என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்? ஒரு ஆள் தூக்கிச் சட்டத்தை எதற்காகக் கொண்டு வந்தீர்கள்?

​பாபர் மசூதி இடித்தவன் பிஜேபி. இடிக்க அனுமதித்தவன் இவன், காங்கிரஸ். காங்கிரஸ்! உங்கள் மகன் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போனால், 3 கிலோமீட்டருக்கு அங்கேயே தடுப்பணை நிறுத்திட்டுப் போராடிட்டுப் போ-ன்றான். இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடப் போனால், 3 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை போட்டு, டிவைடர் போட்டு இங்க நின்னு பேசிட்டுப் போ-ன்றான், பேரிகார்டு போட்டு.

​ஆனா, ரத யாத்திரை நடத்தி இவ்வளவு தூரம் வர்றவன், இந்த பாபர் மசூதியை இடிப்பான்-னு கணிக்காம என்ன புடுங்கிட்டு இருந்த? உன் உளவுத்துறை, காவல்துறை, ஒரு ராணுவம் என்ன பண்ணுச்சு? என்ன பண்ணுச்சு உன்னுடைய ‘ரா’ (RAW) என்ன பண்ணுச்சு? இப்பான்னு தெரியுமா தெரியாதா? ஏறி கோபுர உச்சியில போய் இடிக்கிற வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்த? நரசிம்ம ராவ் காங்கிரஸ் தான ஆட்சி?

​ஏண்டா, கத்திக் குத்தி கொலை பண்றவனை விட, குத்துறதுக்கு வசதியா பிடிச்சுக்கிறான் பாருடா, அவன் தாண்டா பெருத்த அயோக்கியப் பயன். இடிச்சவன் பாரதிய ஜனதா, இடிக்க அனுமதித்தவன் காங்கிரஸ். ரெண்டு பேரும் சம அளவு குற்றவாளி. இந்த நாட்டை மாறி மாறி நாசம் பண்ணது பிஜேபி, காங்கிரஸ், திமுக, அதிமுக. நாலு பேரும் நமக்கு சம அளவு எதிரி. ஒழிக்கணும் இவங்களை. இல்லைன்னா இந்த நாடு நாடாக இருக்காது, சுடுகாடா மாறிடும்.

​நீ நினைச்சிட்டு இருக்க, நம்முடைய புரட்சிப் பாவலன் பாடுகிறான், ‘நாற்பக்கமும் எதிரி, நடுவில் நம் தமிழ்த்தாய்’ என்று. இப்போது ‘நாற்பக்கமும் எதிரிகள், நடுவில் நாம் தமிழர் கட்சி’ என்பதைப் புரிந்துகொண்டு, என் அன்புப் பிள்ளைகள் களத்திலே வெறி கொண்டு வாயுங்கள். நம்முடைய அண்ணன் பழநி பாபா நமக்குக் கற்பிக்கிறான்: ‘தமிழர்களே, எல்லாரும் சொந்தங்களே, இன உணர்வு கொள்ளாதீர்கள், இனப் பற்று கொள்ளாதீர்கள், இன வெறி கொள்ளுங்கள்; அப்போதுதான் நீங்கள்… இல்லையென்றால் நீங்கள் ஆளப்படுவீர்கள், ஒருபோதும் ஆளமாட்டீர்கள்’ என்று.

​கருணாநிதி மகன் ஐயா ஸ்டாலினால தர முடியுதா நல்ல ஆட்சி? ஐயா எடப்பாடியால தர முடியுதா நல்ல ஆட்சி? ஐயா கருணாநிதி ஆட்சியில் 25 ஆண்டுகள் வாழ்ந்துட்டோம். அம்மா ஜெயலலிதா அதுல 20 ஆண்டு. ஐயா ஸ்டாலின்கிட்ட 5 ஆண்டு. ஐயா எடப்பாடிகிட்ட 4.5 ஆண்டு. ஒரு தடவை உன் மகன் ஆட்சியில வாழ்ந்து பாரு, வாழ்ந்து பாரு, உலகத்தின் தலைசிறந்த நாடா மாத்திப் படைக்கிறேனா இல்லையான்னு பாரு.

​எவனாவது கல்வி, தரமான கல்வி, தரமான மருத்துவம், தடையற்ற மின்சாரம், பயணிக்க நல்ல பாதை, பயணிக்க நல்ல போக்குவரத்து சொல்றானா? ஓசி பஸ் ஓட்டுவான். யார் உங்கப்பன்க வீட்டுச் சொத்தை எடுத்து வந்து ஓட்டுவியா? யார்? எங்கப்பன்க வீட்டுச் சொத்தை தான எடுப்ப? வரி வரி-ன்னு சொறிஞ்சு எடுப்ப. நான் ஓசி பஸ்ஸை ஓட்ட வந்த ஆள் இல்ல உன் மகன், ஏசி பஸ் ஓட்டுவேன் காசு கொடுத்துட்டு ஏறு.”

எவை மூன்று கட்டணமில்லாமல் தருவேன்? படிக்கக் கல்வி, குடிக்க நீர், பார்க்க நல்ல வைத்தியம். இந்த மூன்றையும் உலகில் எந்த தரம் என்று சொல்கிறார்களோ, அந்த தரத்தை… அந்த தரத்தை இனி தமிழ்நாட்டின் தரம் என்ற அளவுக்கு உயர்த்தி உன் மகன் தருவேன். ​மற்றது எதையும் இலவசமாகத் தரமாட்டேன், கட்டணமில்லாமல் தரமாட்டேன். தருவேன் சிறப்பாகத் தருவேன்:

​தடையில்லா மின்சாரம். ​தடையில்லா எரிவாயு. ​பசி என்ற சொல் இல்லாமல நானே உணவை வேளாண்மை செய்து விளைவிப்பேன். ​நீ இங்கேயே இரு, குன்னத்திலேயே இரு, பெரம்பலூரில் இரு, அரியலூரில் இரு. அரசாங்க வேலை அங்கேயே தருவேன். நீ வாராதே, திருச்சிக்குக் கூட வரவேண்டாம்.

​அஞ்சு தலைநகராப் பிரிக்கிறேன் உன் மகன். தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம். நான் சொல்லும்போது சிரிச்சா, உங்க ஐயா ஸ்டாலின், நம்ம ஐயா ‘தலைநகரம்’னு அந்த ‘தலை’யை எடுத்துட்டாப்ல. அஞ்சு நகரங்களை உருவாக்குறதுதான் என் முறை. ​நிர்வாகத்தை, அதிகாரத்தைப் பரவலாக்கணும்னு நினைக்கிறேன். சென்னையில் கிடைக்கிறது என் மக்களுக்கு எல்லா இடத்திலும் கிடைக்கணும். அப்போ திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை என அஞ்சு தலைநகரம்.

​என் அன்பு பெற்றோர்களுக்கு, என் உடன்பிறப்புகளுக்கு புரியற மாதிரி சொல்றேன்: ஒரு இடத்துல கருப்பட்டியை வச்சிருறேன், மொத்த ஈ, எறும்பும் ஒண்ணா குவியும். அஞ்சா நுணுக்கி வச்சிருறேன், அங்கங்க கிடைக்கிற இடத்துல கருப்பட்டி கிடைச்சிரும். இப்ப நான் என்ன செய்றேன், எல்லாத்தையும் உன் வாசற்படியிலேயே கொண்டு வந்து வச்சிருறேன்.

​அரசாங்க வேலை குன்னத்திலேயே கொடுத்திருவேன். எப்படி கொடுப்ப? ​2000, 3000 ஏக்கர்ல கரும்பு. ​கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்க ஒரு சாலை. ​எத்தனால் பெட்ரோல் தயாரிக்க ஒரு சாலை. ​சாப்பிடத் தட்டு, தாள், எழுதிப் படிக்கிற தாள். ​மரத்தை வெட்டி வெட்டி தாள் தயாரிச்சுட்டு இருக்கான். இனி மரத்தைத் தொட்டா கைய ரெண்டா வெட்டி தூரப் போட்டுருவேன். மரம் மரமல்ல என் உயிர், மண்ணின் வளம். அதைத் தொடக்கூடாது. மரம் என் மழை, என் காற்று, என் நிலத்தின் வளம்.

​அதனால எல்லாத்தையும் மாற்றணும்னு நினைக்கிறேன் உன் மகன். ​நாட்டுக்கோழி பண்ணை. ​மாட்டுப் பண்ணை, ஆட்டுப் பண்ணை. ​கரும்பு, வாழை, தென்னை, பனை, மரவள்ளிக்கிழங்கு. ​எருக்கலஞ்செடி, கத்தாழை எல்லாவற்றிலிருந்தும் அரசு வேலை. ​நீ எருக்கலஞ்செடின்னு என்னமோ சொல்றானேன்னு நினைப்ப. சுடுகாட்டுலதானே நீ எருக்கலஞ்செடி பார்த்திருப்ப? தெருவுல எருக்கலஞ்செடி முளைக்கும்போது எவ்வளவு கேவலமா பார்த்திருப்ப? அந்த எருக்கலஞ்செடியிலிருந்து ஒரு நூல் எடுக்கிறான். அந்த நூல்ல ஒரு பட்டு செய்றான். அந்த நூல்ல தயாரிக்கப்பட்ட பட்டுதான் உலகத்திலேயே விலையுயர்ந்தது (Very costly in the world). இந்த எருக்கலஞ்செடி பட்டுதான். எனக்கு எருக்கலஞ்செடி வளர்க்குறதுல என்ன சிரமம்?

​சொல்லு… சொல்லு… எருக்கலஞ்செடி, ஆமணக்கு இருக்குல்ல கொட்டைமுத்து, நிலமெங்கும் கொட்டைமுத்த போடுவேன். அதுலருந்து எண்ணெய் எடுப்பேன் விளக்கெண்ணெய். அதுலருந்து புண்ணாக்கு எடுப்பேன் என் மாட்டுக்குத் தீவனம், நிலத்துக்கு உரம். நீ விளக்கெண்ணெய்னு சிரிப்ப, நான் உனக்கு புரியற மாதிரி சொல்றேன், ‘பிரெஞ்சு ஆயில்’ (French oil). பிரெஞ்சு ஆயில்னு சொன்னா மரியாதையா இருக்கும். உனக்கு வந்திருக்க நோயை எருக்கலஞ்செடி…”

ஒன்னும் இல்ல, ஒரு மணி, இந்த பேய் பிடிச்சவனுக்கு வேப்பிலை அடிப்பான்ல அப்படி இந்த நோய் பிடிச்சவனுக்கு பச்சை மட்டை வைத்தியம் பார்த்து தொலைச்சுபுடுவேன், தொலைச்சுபுடுவேன். உன் மகன் உனக்காகப் பேசுறேன்னு கூட தெரியலைன்னா உன்னை ஒருத்தனாலும் காப்பாத்த முடியாது.

​என்னடா, ரெண்டு சீட்டு மூணு சீட்டு அதோரி, .5, .1, .2 விழுக்காடு ஓட்டு வச்சிருக்கவன்ட்ட இம்புட்டு சீட்டு, நோட்டும் பேர் பேசி ‘வா நீ வா, நீ வா’ன்னு கூப்பிடுறான்னா, எட்டரை விழுக்காடு (8.5%), 36 லட்சம் ஓட்டு வச்சிருக்கிறான் ஒரு மகன். என்னை எம்புட்டா பேர் பேசி கூப்பிட்டு இருப்பான்? எவ்வளவு பணம்? இந்த காதுல லிட்டர் லிட்டரா தேன் ஊத்துறான். நான் கூட கோபத்துல ‘காதுலயே ஊத்துறீங்களே தேனை, ஒரு சொட்டு இந்த நாக்குல வைங்களேன்’னு கூட கேட்டேன்.

​அந்த பதவி தர, இந்த பதவி தர – எனக்கு முன்னாடி ரெண்டு இருந்துச்சு:

​பதவியா? மக்களுக்கான உதவியா? ​பணமா? பிறந்த இனமா? ​பதவியா உதவியான்னா ‘உதவி’ – மறுபடியும் வெயிலுக்கு வந்துட்டேன், முச்சந்திக்கு வந்து கத்துறேன். பணமா இனமான்னா ‘இனம்’ – நான் பிறந்த பெருமைமிக்க தமிழன் என்கிற இனம். அதனால உன் மகன் கத்துறேன். இந்த சத்தம் உன் காதுல விழுந்து, உன் மூளைக்குள்ள போய், உன்னை சிந்திக்க வச்சிருச்சுன்னா நான் பிறந்த பயனடைஞ்சுட்டேன்.

​நீ எனக்கு ஓட்டு போடலேன்னா போ, உடம்புல தெம்பு இருக்குற வரை இதே இடத்துல நின்னு கத்தி கத்தி கூட செத்துப்போவேன். ஆனா, இந்த சீட்டுக்கும் நோட்டுக்கும் எவன்ட்டையும் கையேந்துற அந்த பரம்பரையில பிறந்தவன் இல்லை. ஏன்? சரணடைந்து வாழ்வதற்கு, சண்டையிட்டுச் சாவதே மேல். உயிரை இழக்கலாம், உரிமையை இழக்கக்கூடாது. உயிரினும் மேலானது நமது உரிமை, புரியுதா? மண்டியிட்டு வாழ்வதற்கு, மானத்தோடு மாண்டு போகலாம், மரணித்துப் போகலாம். இதுதான் உங்கள் பிள்ளைகளின் நிலைப்பாடு.

​அதனால மானத் தமிழ் மக்கள் இனியாவது சிந்தியுங்கள்… இனியாவது சிந்தியுங்கள். ஓட்டினீங்க, உதயசூரியனுக்குப் போட்டீங்க. அவர் வீட்டுல விடிஞ்சுச்சு, நாட்டுல விடிஞ்சுச்சா? இளவுதான் விடிஞ்சுச்சு. என்ன மாறிச்சு? பார்க்கிற எல்லாரும் கையெடுத்துக் கும்புடுறான், ‘எப்படியாவது இவங்களை ஒழிச்சு விடு’ன்னு. நான் ஒழிக்கிறேன், ஒரே ஒரு ஓட்டைப் போட்டு விடு.

​எனவே என் அன்புச் சொந்தங்கள், இந்த குன்னம் தொகுதியிலே போட்டியிடுகிற என்னுயிர் இளவல் வழக்கறிஞர் இரா. கீர்த்திவாசன் அவர்களுக்கு, விவசாயி சின்னத்தில் வாக்களித்து அவரை வெல்ல வைத்து நீங்கள் வெற்றியடையுங்கள்.

​நீங்கள் இதுவரை 60 ஆண்டுகளாக மாறி மாறி இந்த திராவிடக் கட்சிகள் – திமுக, அதிமுக, உதயசூரியன், இரட்டை இலை, கை, தாமரை எல்லாத்துக்கும் போட்டீங்க. அவர்கள் வென்றார்கள், நீங்கள் தோற்றுப்போனீர்கள். என் மக்கள் தோற்றுப்போனார்கள். அவர்கள் MLA ஆனார்கள், MP ஆனார்கள், மந்திரி ஆனார்கள், முதலமைச்சர் ஆனார்கள், ஆனால் நீங்கள் தோற்றுப்போனீர்கள். இம்முறை என் பிள்ளைகளுக்கு வாக்குச் செலுத்தி அவர்களை வெல்ல வையுங்கள், நீங்களும் வெற்றியடையுங்கள்.

​புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்: ‘அதிகாரம் மிக வலிமையானது’. எல்லா துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே என்கிறார்.” ஆனால் அந்த அதிகாரம் என் மக்களுக்கானது என்று நிக்கிறோம். அதிகாரம் மிக வலிமையானது என்கிறார் அண்ணா. நாங்கள் அந்த அதிகாரத்தை அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது என்ற முழக்கத்தை முன்வைக்கிறோம். எனவே, எங்கள் உள்ள குமரலை, எங்கள் ஆழப்பிறிய கனவை, மகத்தான கனவை என் மக்களுக்குக் கடத்திக்கொண்டே வருகிறோம்.

​பேச்சால், எழுத்தால், காணொளி காட்சிகளால் நான் ஒவ்வொரு ஊர்லயும் போட்டுக்காட்டுகிறேன். உங்கள் மகனின் ஆட்சி எப்படி இருக்கும்? உங்கள் ஆட்சி எப்படி இருக்கும்? தமிழ் தேச அரசு, தூய தமிழரின் ஆட்சி எப்படி இருக்கும் என்று போட்டுப் போட்டுக்காட்டுகிறேன். அதைப் பாருங்கள்; இது நன்றாக இருக்கிறது. இந்த பிள்ளைகள் கையில் நாடு இருந்தால் நாடும் மக்களும் பாதுகாப்பா இருப்பார்கள், நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வாக்குத் தாருங்கள்.

​இல்லையென்றால் வாக்கைக் காசை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்கை போட்டுவிட்டு எங்களுக்கு வாக்கரிசி போட்டுவிட்டு விட்டுவிடுங்கள். என் மக்கள்கிட்ட ஒண்ணுதான் சொல்லுவேன்: நாங்க இருக்கிறது உங்களுக்கு இடையூறா இருந்ததுன்னா, இங்க வாயா என் வீட்டுக்குச் சாப்பிட கூப்பிட்டு சோத்துல விஷத்த வச்சு எங்களைக் கொன்று விட்டுருங்க. நிம்மதியா நாங்க செத்துப் போறோம், நீங்க நிம்மதியா இந்த ஆட்சியில இருந்து… உனக்கு ஒன்னும் இல்லை!

​குடிக்க நீர் இல்லை – வித்துட்டான். ​படிக்க கல்வி இல்லை – வித்துட்டான். ​பார்க்க மருத்துவம் இல்லை – வித்துட்டான். ​சுவாசிக்க காற்று இல்லை. ​ஒரு மனுஷனுக்கு 422 மரம் வேணும். இத்தனை பேர் நிக்கிறீங்க, எத்தனை மரம் இருக்குன்னு பார்த்துக்க. ஒரு கார் வெளியிடுகிற நச்சுப் புகையைக் கட்டுப்படுத்த 6 மரம் வேணும். எத்தனை கார் ஓடுது, எவ்வளவு மரம் வச்சிருக்கான்னு பார்த்துக்க. பார்த்துக்க நீ பார்த்துக்க! நீ காற்றைச் சுவாசிக்கல, கந்தகத் தூசியைச் சுவாசிக்கிற. கந்தகத் தூசியை! நுரையீரல் தொற்று, புற்று, தோல் எரிச்சல், கண் எரிச்சல் எல்லாம் வருதுன்னா அதுனாலதான் வரணும்.

​பிறக்கிற குழந்தை புற்றுநோயோட பிறக்குதுன்னா இந்தக் கருமத்தால்தான். இதையெல்லாம் தடுக்கணும் காப்பாத்தணுமா? இந்த மகனைப் பிடிச்சுக்க, அப்படிப் பிடிச்சுக்க. பல கோடி பணத் திட்டம், பத்தாண்டு பசுமைத் திட்டம்ன்னு நிறைவேற்றி என் தாயைப் பச்சைப் போர்வையால போர்த்திருவேன் என் பூமியை. ஒரு தடவை வாய்ப்பு கொடு.

​ஒன்னும் உனக்கில்லை. படிச்சா படிச்ச வேலை இல்லை பார்த்துக்க. 70 லட்சம் பேர் தமிழ்நாடு தேர்வாணையத்துல (TNPSC) தேர்வெழுதிட்டு வெளியில நிக்கிறான். நான் எல்லாருக்கும் வேலை தரேன்னு சொல்றேன். படிச்சவன், படிக்காதவன் அனைவருக்கும் அரசாங்க வேலை தரேன்னு சொல்றேன். எப்படித் தர்றேங்கிறதையும் சொல்றேன் பாரு! என்ன உனக்கு வச்சிருக்கான்?

​உன் பூமித்தாயின் மார்பை அறுத்துக் குவாரின்னு கொண்டு வர்றான். நீ படிச்சிருக்கில்ல? மழையில்லாத நிலம் பாலைவனமாயிரும்னு படிக்கலையா? மலையிலைன்னா மழை பெற முடியாதுன்னு படிக்கலையா நீ? தாயின் மார்ல இருந்து பால் வந்துச்சு நீயும் நானும் குடிச்சோம். பூமித்தாயின் மலை மார்பிலிருந்து தான் அருவிப் பால் வந்துச்சு. அதுதான் உலக உயிர்களின் தாய்ப்பால். அதுல தான் ஆறு, அதுல தான் நீர், அதுல தான் வயிறு, அதுல தான் உயிர், அதுல தான் வாழ்க்கை. அப்ப அந்த மார்பை அறுத்துட்டா எந்த உயிர் வாழும்? ஏன் சிந்திக்கல?

​உன் ஆத்து மணலை எல்லாம் அள்ளித் தின்னுட்டான் – பாலாறுல, காவேரியில, வைகையில, தாமிரபரணியில. எங்கே வச்சிருக்கான் மண்ணு? எங்கே வச்சிருக்கான் மணலை? வித்துத் தின்னுட்டான். செத்துப் போச்சு உன் ஆறு. உயிர்ப்பிக்க உன்னால முடியாது. ஆறு இல்லைன்னா நீர் ஏது? இதெல்லாம் உனக்குச் சொன்னா எங்கே புரியுது? நீ வாங்கு இதுல 2000, 2500, 2000… இன்னொன்னுல இருந்து 2000!”

அங்கே பாருங்க… காய்கறி, வெள்ளரிக்காய், சுரைக்காய் அங்கே கீரை வைப்போம். அதை யார் கொடுப்பா? அந்த பிரிட்ஜ் கொடுத்தவனா கொடுப்பான்? ​எங்கப்பன் விவசாயி தான் கொடுக்கணும். புரியுதா?
​அவன் தான் மிக்ஸி கொடுத்தான். எதை ஆட்டுவ? மிக்ஸியில எதை ஆட்டுவ? மிளகாய், மஞ்சள், மல்லி – யார் கொடுப்பா? ஐயா ஸ்டாலின்னா கொடுப்பார்? ​யார் கொடுப்பா? என் அப்பன் விவசாயி தான் தரணும்.
​கிரைண்டர், கிரைண்டர் – மாவு அரைக்கிறத எதை போட்டு ஆட்டுவ? எதை போட்டு ஆட்டுவ? அரிசி, பருப்பு, உளுந்து, சீரகம், வெந்தயத்தை போட்டு ஆட்டுவ. யார் கொடுப்பா? என் விவசாயி தான். ​விவசாயி தான். எது இல்லாம நீ வாழ முடியும்? சோறும் நீரும் இல்லாம வாழ முடியாது. ​சோறையும் நீரையும் தருபவன் விவசாயி என்பதால் தான் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்று உன்னுடைய வேதம் கற்பிக்குது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி. ​புரிஞ்சிக்கிட்டு விவசாய சின்னத்தில் வாக்கினை செலுத்தி நல்ல நாட்டை கட்டமைக்க பாருங்க. ​விவசாய சின்னத்திற்கு வாக்களிப்போம், வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என்கிற உறுதியை ஏற்போம் என் அன்பு சொந்தங்களே.

​போட்டாச்சு போட்டாச்சு! என் பங்காளி வடிவேலு சொல்ற மாதிரி போட்டாச்சு! எத்தனையோ போட்டாச்சு போட்டாச்சு! இரட்டை இலை போட்டாச்சு போட்டாச்சு, சூரியன் போட்டாச்சு, கை போட்டாச்சு, தாமரை போட்டாச்சு போட்டாச்சு. போடுங்கடா விவசாயிக்கு போடு! ​சாப்டுட்டு தான ஓட்டு போட போற? நன்றின்னு ஒன்னு இருக்குல்ல? சோறு போட்ட விவசாயி தானே? அந்த நன்றிய மறக்காம போய் வாக்குப்பெட்டியில இருப்பான் பாரு கலப்பையோட அப்படியே! ​வேற யாருமில்ல உன் மகன் தான், நான்தான் சின்னம்!
​அது நிஜம் தான ஐயா? எண்ணமும் நான்தான், சின்னமும் நான்தான். நான்தான் சின்னம்! ​எங்க என் மகன் சீமானைத் தேடு? எங்க என் அண்ணனை, எங்க என் மாமனைத் தேடு, எங்க என் சித்தப்பனைத் தேடு – கலப்பையோட நிப்பேன்.

​ஏன்? இறைமகன் இயேசு சிலுவையை சுமந்தார் உலக மக்களின் பாவத்தை போக்க. உன் மகன் இந்தக் கலப்பையை சுமக்கிறேன் எதுக்கு? என் மக்களின் பசியைப் போக்க! ​புரிஞ்சிக்கிட்டு போடு, போட்டுட்டா போட்டுட்டா! ​நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், “அநீதியை எதிர்க்க துணிவில்லாதவன் அதைச் சகித்துக் கொள்கிறான். சகித்துக் கொள்கிறவன் அடிமையாகிறான்”. ​அப்ப என்ன சொல்ல வராரு? “அநீதியைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிந்து எதிர்த்துப் போராடுகிறான் எவனோ அவனே உண்மையான ஜிகாத்” என்கிறார். உண்மையான புனிதப் போராளி. ​அப்படி எவனாவது இந்த மண்ணில் இருந்தானா? இருந்தான் ஒருத்தன். யாரு? என் உடன்பிறந்தான், என் மூத்தவன், என் அண்ணன் பழனி பாபா! ​அவன் தான் அநீதியைக் கண்டு அச்சமில்லாமல் துணிந்து எதிர்த்து நின்று போராடிய புனிதப் போராளி, அவன் தான்!

வென்றே தீருவோம், வென்றே தீருவோம்! சத்தியத்தின் மக்கள் நாங்கள் சாகலாம், தோற்கலாம் – சத்தியம் தோற்காது! ஒரு நாள் வெல்லும். சரித்திரத்தில் தமிழர்கள் நின்றார்கள், வென்றார்கள்; தன்மானத்தோடு தமிழர்கள் தலைநிமிர்ந்து நின்றார்கள், வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு வரும். வரவேண்டுமென்றால், என் அன்புச் சொந்தங்கள் வேளாண் குடிமகன் விவசாயச் சின்னத்திலே வாக்களித்து, உங்கள் பிள்ளைகளாகிய எங்களை வெற்றி பெற வைத்து, நீங்களும் வெற்றி அடையுங்கள்.

​புரட்சி என்பது ஓர் தலைகீழ் மாற்றம். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். மாறுவோம், மாற்றுவோம்! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. புரட்சி எப்போதும் வெல்லும், நம் வெற்றி அதைச் சொல்லும். இனம் ஒன்றாவோம், இலக்கு வென்றாவோம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! என் தம்பி கீர்த்திவாசன் வெல்க! என் தங்கை சுபஞா வெல்க! வெல்க, வெல்க, நாம் தமிழர்!”

தமிழ் பேரினத்தில் தோன்றிய மகத்தான புரட்சியாளர்கள், ஒருவர் என் தாத்தன் கலியபெருமாள். இன்னொருவன் அவன் சமகாலத்திலே தோன்றிய ஒப்பற்ற புரட்சியாளன், தமிழின விடுதலைக்கும் தமிழர் உரிமைக்குமாக அரும்பாடாற்றி இன்னுயிரை ஈந்த ஒரு மாபெரும் வீரன், என் அண்ணன் பொன்பரப்பி தமிழரசன்.

​தமிழரசன், தமிழரசன், தமிழரசன் என்ற பெயரை இந்த மகனுக்குச் சூட்டுகிறேன். என் அண்ணன் தமிழரசனைப் போல இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சாதி மத உணர்ச்சிகளைக் கடந்து, மொழியினப் பற்று கொண்டு, தாழ்ந்து வீழ்ந்து கிடந்த தமிழ் பேரினம் மேலெழ வேண்டும், பெருமையோடு வாழ வேண்டும் என்று அவர்கள், தமிழரசன் தாத்தா கலியபெருமாளின் பேரனும் உடன்பிறந்த தம்பி தங்கைகளும் போராடுவது போல எதிர்காலத்தில் இந்த பிஞ்சு மகன் போராடுவான் என்கிற உறுதியோடு அவனுக்குத் தமிழரசன் என்ற பெயரைச் சூட்டி மகிழ்கிறேன்.

​வாழ்த்துகள் தம்பி. ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி. ​எங்கயாவது இந்த தமிழ்நாட்டு அரசியல்ல இவன்தான் கூட்டத்துக்கு ஆள் காசு குடுத்து கூட்டியிருப்பான், குவாட்டர் சாப்பாடு குடுத்து, இவன்தான் ஓட்டுக்கு காசு என்பான். 1000 தாரேன் 500 தாரேன்னு… பச்சப் பச்ச பிள்ளையா அப்பா அம்மா தின்பண்டம் வாங்கி கொடுக்கிற காசைச் சேமிச்சு சேமிச்சு தன் மகனுக்கு, தன் பிள்ளைகளுக்கு ஒரு தாய்… இங்க பாரு ஒரு மின்பணியாளர் (Electrician) அண்ணா, 50 ரூபாய் இதான் இருக்கு வச்சுக்க வச்சுக்கன்னு….

​என் தம்பி திருக்கோவிலூர்ல பேசிட்டு இருந்தேன், அவன் வந்தான். ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி. இந்த பேருதான் நான் பெற்ற வெற்றி. இங்க பாரு என் தம்பி ஓடி வந்து ‘அண்ணா, இந்தா 5000, இந்தா 5000’ வண்டியில ஏறிட்டு, ஏறிட்டு… இந்தா இந்தா 5000-னு என்னைக் கட்டிப்பிடிச்சு சொல்றான், ‘அண்ணே நான் முடிவெட்டி 5 நாளா உனக்கு கொடுக்கணும்னு சேமிச்சு இந்த 5000-த்தை கொடுக்கிறேன்’னு. அந்தத் தம்பியின் பேரன்பு, இவருடைய பேரன்பு… இதான்டா நான் இந்த களத்துல கண்ட வெற்றி.

​தமிழ் பேரினம் விழித்துக்கொண்டது. தன் மாண்போடு வாழத் தொடங்குகிறது. அந்த தம்பிக்காக, இந்த மக்களுக்காக, இந்தப் பிள்ளைகளுக்காகவாவது உங்கள் பிள்ளைகள் வென்று…”.கூட்டத்துல நோட்ட கொடுத்து ஓட்ட போடுகிற ஒரு கூட்டம், என் மக்கள் தாண்டா! ​ஒன்னுமில்ல, எனக்கு பின்னாடி எதுவும் இல்ல. சாதி, மதம், அப்பன், அமைச்சர், மந்திரி… அதெல்லாம் கிடையாது. சாதாரண மகனை, 36 லட்சம் வாக்கை போட்டு, மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்தியவர்கள் என் மக்கள் தான்.

​மூன்றாவது இடத்தில் நிற்க வைத்த என் மக்கள், முதலாவது இடத்தில் நிற்க வைக்கப் போவதும் என் சொந்தங்கள் தான். அவர்களுக்குத் தெரியும், காரைக்குடி தொகுதியில் நிற்கிறான் சீமான், அவன் காரைக்குடிக்கு மட்டுமானவன் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்ப் பிடிக்குமான மகன் என்பது என் மக்களுக்குத் தெரியும்.

​அறிவார்ந்த தமிழ்ச் சமூக மக்கள், இனவுணர்வும் மானவுணர்வும் கொண்ட என் உயிர்ச் சொந்தங்களே! உங்கள் மதிப்புமிக்க வாக்கை உங்களுக்கே செலுத்தி வெற்றி அடையுங்கள். உங்களுக்கு நீங்களே செலுத்தும் சின்னம் விவசாயி சின்னம். ​நன்றி, வணக்கம்! நாம் தமிழர்!” என பேசினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!