Perambalur: The collector garlanded the organ donor on behalf of the government!
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெகதீசன் (23) என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து ஜெகதீசன் உடலுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகத்தை கவுரவிக்கும் வகையிலும், தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையிலும் இறந்தவரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெகதீசன் வயது 23 மற்றும் முத்துவேல் மகன் பாலா வயது 23 ஆகியோர் 01.10.2024 அன்று இரவு சுமார் 08 மணி அளவில் பெரம்பலூரில் இருந்து கீழக்கணவாய் நோக்கி பைக்கில் சென்ற போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதித்தினர். இதில் சிறு காயங்கள் அடைந்த பாலா அன்றே சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டார்.
தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த ஜெகதீசன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அவரின் பெற்றோர்களுக்கு தெரிவித்ததன் பேரில், அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க பெற்றோர்கள் சம்மத கடிதம் அளித்தனர்.
மேற்படி இறந்த ஜெகதீசன் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதை தொடர்ந்து, கலெக்டர் கிரேஸ் பச்சாவ், கீழக்கணவாயில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலிற்கு அரசின் சார்பில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், பெரம்பலூர் தாசில்தார் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.