Permission for the Jallikattu is done according to the provisions of the Government rules: Perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட ஆடசியர் வே.சாந்தா ஜல்லிக்கட்டு தொடர்பான கூட்டத்தில் தகவல் :
அன்னமங்கலம் மற்றும் குளத்தூர் கிராமங்களில் முறையே 20.05.2018 மற்றும் 31.05.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வோர் தங்கள் பகுதியின் வருவாய்த்துறை வட்டாட்சியரிடம் தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும், தங்களது உடல்தகுதி குறித்து உரிய மருத்துவரிடம் சான்று பெற்று ஆஜர் செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்படவில்லை என்று கால்நடைத்துறையினரால் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும், அந்த மாடுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்பதனை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.
காளைக்கு ஏதேனும் நோய்கள் அல்லது காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் ஓய்வளிக்கப்படவேண்டும்.
காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் போதிய இடைவெளி அளிப்பதுடன், அவை பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகில் இருக்கவேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைத்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் கண்காணித்து பதிவு செய்யப்படவேண்டும்.
பார்வையாளர்களும், சுற்றுப்புறத்தாரும் பாதிக்கப்படாத வகையில் உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையாளா;கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரி வசதி ஏற்படுத்தப்படவேண்டும்.
ஜல்லிக்கட்டு நல்லமுறையில் நடைபெற விழாக்குழுவினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். தன்னார்வலர்கள் போதிய எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படவேண்டும்.
மாடுபிடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்படவேண்டும். காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட பிறகு கடைசியாக செல்லும் இடத்தில் அவைகளுக்கு தீவனமும், நீரும் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். மேலும், நிழலில் காளைகள் இருக்கும் வகையில் பந்தல் அமைக்கப்படவேண்டும்.
எனவே, ஜல்லிக்கட்டு விழா நடத்தும் விழாக் குழுவினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி, ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காவல் துறையினர் , வருவாய், கால்நடை பராமரிப்புத்துறையினர் ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.