Shantha is the first female collector of Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவராக, வே.சாந்தா-வை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த க.நந்தகுமார் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராகவும், மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய வே.சாந்தா பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தாவிடம் பொறுப்புகளை க.நந்தகுமார் இன்று ஒப்படைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள வே.சாந்தா 1997 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை ஆட்சியராக பணியில் சேர்ந்து, பின்னர், கோபிச் செட்டி பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியராகவும்,

2005 முதல் 2007 வரை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னையில் முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி துணை ஆணையராகவும், பின்னர் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க முதன்மை செயல் அலுவலராகவும் பணியாற்றி தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற வே.சாந்தா தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மகளிரின் முன்னேற்றத்திற்காக தனிகவனம் செலுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவற்கான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.

பின்னர், புதிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அரசு பணியாளர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!