The consultative meeting for the co-operative officers took place in Perambalur.
கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுறவு தேர்தலில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் 65 சங்கங்களுக்கும், பால்வளத்துறையில் 160 சங்கங்களுக்கும், வீட்டுவசதித் துறையில் 5 சங்கங்களுக்கும், மீன்வளத்துறையில் 5 சங்கங்களுக்கும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 சங்கங்களுக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 1 சங்கத்திற்கும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 1 சங்கத்திற்கும், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் சார்பில் 1 சங்கத்திற்கும் என மொத்தம் 240 சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனு பெறுதல், அதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு உள்ளிட்ட பணிகளில் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 360 அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தொpவித்ததாவது:
தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து சங்கங்களுக்கும் முறையாக உறுப்பினர் பட்டியலை தயாரித்து, அதனடிப்படையில் தகுதியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும். வாக்காளர் பட்டியல் மீது, உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புகளை தெரிவிப்பதைத் தொடர்ந்து, இவற்றை பரிசீலித்து வாக்காளர் பட்டியல் அலுவலர் இறுதியான வாக்காளர் பட்டியலை சங்கத்தில் வெளியிடுவார்.
இதனைத்தொடர்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் பணி தொடங்கி போட்டி இருப்பின் வாக்குப் பதிவு நடத்தப்படும். எனவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து அலுவலர்களும், தேர்தல் தொடர்பாக தங்களுக்குள்ள சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளரை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர;தல் ஆணைத்தின் செயலருமான அந்தோணிசாமி ஜான்பீட்டர் பேசியதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேர்மையுடனும், உண்மைத் தன்மையுடனும் செயல்படவேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அனைவருக்கும் சம்மந்தப்பட்ட தங்களின் துறைகளின் சார்பில் தேர்தல் குறித்த விதிமுறைகள் அடங்கிய கையேடு வழங்கப்படும். அனைவரும் இந்தக்கையேட்டில் உள்ள விதிகளை முழுமையாகப்படித்த தெளிவுபெறவேண்டும்.
வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வேட்புமனு பெறுதல், போட்டியிருப்பின் வாக்குப் பதிவு நடத்தி முடிவுகள் அறிவித்தல் என கூட்டுறவு சங்கத் தேர்தலின் அனைத்து நிகழ்வுகள் குறித்துமான தெளிவு உங்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும் என்று கூறிய அவர் முக்கிய விதிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெ.பெரியசாமி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுதர்சன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி, துணை பதிவாளர் பாண்டிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.