Women self-help groups: health field workers uniform: Collector presented.
பெரம்பலூர் மாவட்டம் சுகாதாரத் துறை மற்றும் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழு பயிற்றுநர்களில் 90 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, மகளிர் சுகாதார ஆர்வலர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்தாவது:
களப்பணியாளர்கள் தங்களது துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தொற்றா நோய்களைக் கண்டறியும் உபகரணங்களைக் கொண்டு இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து அவர்களை அக்கிராமத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தொடர் பரிசோதனை மற்றும் சிகிச்சைபெற அறிவுரை வழங்க வேண்டும்.
கிராமங்களில் பொது இடங்களில் மலம் கழித்தலைத் தவிர்க்கவும், இதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் செய்வதனாலும், இளம் வயதில் பிரசவிப்பதனாலும் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பற்றியும் களப்பணியாளர்கள் கிராம மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறையுள்ளவர்காக நீங்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவிலான முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களில் தேர்வு செய்யப்பட்ட 90 சுகாதார களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சீருடைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.உமாமகேஸ்வரி உடனிருந்தார்.