பெரம்பலூர் : பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் அருகே, வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லாததால், இங்கிருந்து பெரம்பலூர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஷேர் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர்.
மேலும், மின் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனராம். மேலும், கழிவுநீர் கால்வாய் இன்றியும், குடிநீர் பற்றாக்குறையாலும் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும்.
அங்குள்ள நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களும் முறையாக கிடைக்கப் பெறுவதில்லை என்றும்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த அப்பகுதி மக்கள் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தராததை கண்டித்தும், நிறைவேற்ற வலியுறுத்தியும், அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.