தங்களுக்கு வழங்கப்பட்ட, 67 லட்ச ரூபாய் காசோலை தொலைந்து போனதாக கூறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் 75க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2013-14ம் ஆண்டிற்கு பழங்குடியினர் நல இயக்கத்தின் அரசு வழங்கும் திட்டத்தின் மூலம் 50 கறவை மாடுகள், 20 தொகுப்பு வீடுகளுக்கான 67 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளை ஓராண்டு காலமாக வழங்காமல் பெரம்பலூர் ஆதிதிராவிடர் பழங்குடியின அலுவலகத்தில் தங்களை அலைக்கழிப்பதுடன், அந்த காசோலைகளும் தொலைந்து விட்டதாக கடந்த ஓராண்டுக்கும் மேல் தெரிவித்து வருகின்றனர்.
எங்களுக்கு அரசு வழங்கிய சலுகையை கடந்த ஓராண்டுக்கும் மேல் உள்நோக்கத்துடன் வழங்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த காசோலைகளை கண்டுபிடித்து உடனே வழங்க வேண்டும் என அந்த மனுவில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.