பெரம்பலூர் : பெரம்பலூரில், அனுமதி பெறாமல் திரைப்பட பாடல்களை ஒளிபரப்பிய லோக்கல் டிவி உரிமையாளரை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பெரம்பலூர் நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான லோக்கல் டிவிகளில் அனுமதி பெறாத திரைப்படம் மற்றும் பாடல்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக, தஞ்சையை சேர்ந்த சேனல் விஷன் வெல் மீடியா நிறுவன மேலாளர் பி. குமார் (42), திருட்டு வீடியோ தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில், திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில், ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீஸார் பெரம்பலூர் நகரில் வியாழக்கிழமை நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சேனல் விஷன் வெல் மீடியா நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறாமல், அந்நிறுவனம் உரிமம் பெற்றிருந்த சில பாடல்களை லோக்கல் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மேலாளர் குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸார் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகாந்தை கைது செய்து, ஒளிபரப்பு செய்யப்பட்ட கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.