பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் குறித்து அவ்வப்பொழுது ஆய்வு நடத்தி மாணவ, மாணவிகளின் கற்கும் திறன் குறித்து பரிசோதித்து வருகின்றார். அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் எளம்பலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவ, மாணவிகளின் கற்கும் திறன்களை கண்டறியும் வகையிலும், தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக வைத்தும் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் நிறக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அனைத்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களோடு மாவட்ட ஆட்சியர் மாதம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தி மாணவர்களின் கற்கும்திறன் குறித்து ஆலோசனை செய்வார்.
அதன்படிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்து, ஆசியரியர்களிடம் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், அவற்றை களைவதற்குத் தேவையான வழிவகைகள் குறித்தும் தொடர் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்று எளம்பலூரிலுள்ள துவக்கப்பள்ளி ஆய்வின் பொழுது மாணவ, மாணவிகளின் எழுதும் திறன் பற்றி அறிவதற்காக குழந்தைகளின் பெயர் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் பெயர்களை எழுதச் சொல்லியும், அவர்களின் பாடபுத்தகத்திலிருந்து மாணவ, மாணவிகளை வாசிக்க சொல்லியும் அவர்களின் கல்வியின் தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், தங்களது பெயர்களை தவறுதலாக எழுதிய குழந்தைகளிடம் எவ்வாறு சரியாக பெயர்களை எழுதுவது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்குள்ள 7-ம் வகுப்பு மாணவர்களிடம் அறிவியல் பாடம் குறித்தும் அதிலுள்ள ஆற்றல் அழிவின்னை விதி போன்ற அறிவியல் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் கணித திறமையை பரிசோதிப்பதற்காக அவர்களின் பாடத்திட்டத்திலுள்ளபடி எளிய கணக்குகளை கொடுத்து அவற்றை எவ்வாறு மாணவ, மாணவிகள் செய்கிறார்கள் என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதே போன்று லப்பைகுடிகாட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், ஒகளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.