பெரம்பலூர்: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்ற 10வது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வில்; பாடவாரியாக 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சூப்பர்- 30 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாராட்டு மடல் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த ஆட்சியர் பேசியதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக திகழ முடியும். மாணவர்களின் வெற்றிக்கு உழைக்கும் ஆசிரியர்களை பாராட்டும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பாராட்டக்கூடியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்களின் செயல்பாடுகளாகும். ஆசிரியர்களின் பணி சிறந்தது. அதை, பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். மாநில அளவில் ப்ளஸ் 2 தேர்ச்சி வீதத்தில் கடந்த ஆண்டு 17-வது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம், நிகழாண்டு 2 ஆம் இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு முதலிடம் பெறுவதற்கு ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டும் என ப. மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும், கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுமே பயில்கின்றனர். பெற்றோர் தனிக் கவனமெடுத்துச் சொல்லிக் கொடுக்கும் சூழலோ, பணம் கொடுத்து
தனிப் பயிற்சி பெறும் வாய்ப்போ இல்லாத மாணவர்கள் தான் அதிகம் பயில்கின்றனர். பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை, படிக்காத பெற்றோரின் குழந்தைகள் போன்ற தடைகளையெல்லாம் கடந்து, அதிக அளவு மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கும் ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது.
சில தனியார் பள்ளிகளில் 100 சத தேர்ச்சியை மனதில் கொண்டு கீழ் வகுப்புகளில் வடிகட்டும் முறை பின்பற்றப்படுவது வருந்தத்தக்கது. மாணவர்களைத் தரம் பிரிக்காமல், தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில், அவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவது மிகவும் அவசியம். குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களிடம் தனிக் கவனம் செலுத்தி, அவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்வது ஆசிரியர்களின் கடமை. அதை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களைப் பாராட்டுவதில் மக்கள் சிந்தனைப் பேரவை பெருமிதம் கொள்கிறது என த. ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.
தொடர்ந்து, 800க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. நாகராசு, மாவட்ட கல்வி அலுவலர் சு. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை உறுப்பினர் எம்.எஸ். மணிவண்ணன் வரவேற்றார். சூப்பர் -30 ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன் நன்றி கூறினார்