பெரம்பலுார் : பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலுார் மாவட்டம் நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மனைவி நல்லம்மாள்,65, இவரது ஊரில் நல்ல தண்ணீர் குளம், சாமக்குளம், குட்டை என மூன்று நீர்நிலைகளை
முன்னால் வி.ஏ.ஓ.,க்கள் திருநாவுக்கரசு, கோபால் ஆகியோர் உதவியுடன் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர் என பல ஆண்டுகளாக கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலர்களுக்கு புகார் கொடுத்து வந்தார். இதற்கு அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும்
எடுக்காததால் கடந்த 2013ம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஆறு வார
காலத்துக்குள் ஆக்கிரப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து
இரண்டு நபரின் வீடுகளை மட்டும் வருவாய்த்துறை அலுவலர்கள் அகற்றியதாக தெரிகிறது.
இதனையடுத்து அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த 10 வருடத்துக்கும் மேலாக நல்லம்மாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தனது வக்கீல் மூலம் கலெக்டருக்கு நல்லம்மாள் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு கலெக்டர் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டதாக இவருக்கு பதில் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நல்லம்மாள் நேற்று பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தார். கூட்ட அரங்கத்துக்கு வெளியில் நின்றுக்கொண்டு கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்களை ஒருமையில் திட்டினார். அங்கு பணியில் இருந்த போலீஸார் நல்லம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.