பெரம்பலூர்: குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதா நிலையம், ஈச்சம்பட்டி அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் நேரில் பார்வையிட்டார்.
தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு துணை சுகாதார நிலையங்களை அமைத்துள்ளது. கிராம செவிலியர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட துணைசுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் கர்ப்பமுற்றதை பதிவு செய்தல், சுகாதார மற்றும் கர்ப்பகால ஆலோசனைகள் வழங்குதல், நோய் தடுப்பூசிகள் போடுதல், சிறு மருத்துவ உதவிகள் வழங்குதல் ஆகிய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தல், தேவைப்படின் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், ஆரம்ப நிலை சிகிச்சை அளித்தல், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்தல், பிரவசம் பார்த்தல், கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர்ச்சி மற்றும் நிலை குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்தல் ஆகிய பணிகளும், செவிலியர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் கர்ப்பமுற்றதை பதிவு செய்தல், தடுப்பூசிகள் போடுதல் ஆகிய பணிகளும், மகப்பேறு நிதிஉதவி வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று குரும்பலூர் மற்றும் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதா நிலையங்கள், ஈச்சம்பட்டி அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மதுசூதன், கர்ப்பிணித்தாய்மார்கள் குறித்த பதிவேடுகள், தமிழக அரசின் மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்ட விபரங்கள், மருந்துப் பொருட்கள் இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் எசனை ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சுகாதார நிலையத்தினை நெடுஞ்சாலையுடன் இணைக்க இணைப்பு சாலை வசதியினை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது பொதுப்பணித்துறை (மருத்துவ கட்டமானப்பிரிவு) உதவி செயற்பொறியாளர் பேரானந்தகுமார், கொள்ளை நோய் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் அரவிந்த் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.