பெரம்பலூர் அருகே விவசாயிக்கு ரூ.5ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க தேசிய வங்கி கிளைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது64). விவசாயி. இவர் எறையூரில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் விவசாயத்திற்காக நகைகளை அடகுவைத்து 10.5.2006-ல் ரூ.50ஆயிரம் நகைக்கடன் பெற்றிருந்தார்.
விவசாய நிலத்தை சீர்படுத்தி பயிர்சாகுபடி செய்த பாலுசாமிக்கு வேளாண்மையில் நட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2008-ல் மத்திய அரசு, விவசாய கடன் மற்றும் கடன்நிவாரண திட்டத்தை அறிவித்து விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்திட உத்திரவிட்டது.
ஆனால் வங்கி நிர்வாகத்தினர் பாலுசாமியின் கடன்மீதான வட்டி மற்றும் கடன்நிலுவையில் முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ரூ.20ஆயிரத்தை மட்டும் தள்ளுபடி செய்து மீதமுள்ள தொகை ரூ.40ஆயிரத்து 626- ஐ வங்கியில் செலுத்துமாறு பாலுசாமிக்கு அறிவுறுத்தினர். அதன்பேரில் பாலுசாமி ரூ.40ஆயிரத்து 626- ஐ வங்கியில் செலுத்தினார்.
மேலும், இதுகுறித்து மத்தியஅரசு அறிவித்த திட்டத்தின்படி முழுகடன்தொகையையும் தள்ளுபடி செய்யாத வங்கி நிர்வாகத்தின் மீது வங்கியின் மத்திய அலுவலகத்திலும், பாரத ரிசர்வ் வங்கிக்கும் பாலுசாமி புகார் செய்தார். ஆனால் அவரது புகார் மீது உரிய நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் மனஉளைச்சல் அடைந்த பாலுசாமி வங்கி நிர்வாகம் மீது 6.7.2011 அன்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். வழக்கு நிறைவில் மனுதாரர் பாலுசாமியை மனஉளைச்சல் மற்றும் சிரமத்திற்கு ஆளாக்கிய வங்கி நிர்வாகம் பாலுசாமியிடம் பெற்ற ரூ.40ஆயிரத்து 626-ஐ திருப்பி தருவதுடன், அவர் அடைந்த மனஉளைச்சலுக்கான இழப்பீட்டுத்தொகை ரூ.5ஆயிரத்தையும் 2மாதத்திற்குள் வங்கி நிர்வாகம் வழங்கவேண்டும். 2 மாதத்திற்குள் வழங்க தவறினால் 9சதவீத வட்டியுடன் சேர்த்து பாலுசாமியிடம் வழங்கவேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்கு நேற்று உத்திரவிட்டனர்.