பெரம்பலூர் : சென்னையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை சி.பி.ஐ போலீஸார் விசாரணை நடத்தி, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயிலச்சென்ற பெரம்பலூர் அரசு மருத்துவர் சத்யா சேசு, கடந்த மாதம் 20 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கை சி.பி.ஐ போலீஸார் விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும், கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட மக்கள் போராட்டக் குழு சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய்ததில் உள்ல காந்தி சிலை எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மருத்துவக்கழக திருச்சி மத்திய மண்டல செயலர் டாக்டர் சி. கருணாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலர் என்.எஸ். இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் வீ. ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் பி. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஜெ. தங்கதுரை, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் டி. தமிழ்செல்வன், பெரியாரிய இயக்கத்தை சேர்ந்த துரை. தாமோதரன், வழக்குரைஞர்கள் அருள், இலியாஸ், விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஏ. ராஜூ உள்பட பேர் கலந்துகொண்டனர்.