பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்ட செயலர் (பொ) எஸ்.பி.டி. ராஜாங்கம் தலைமை வகித்தார்.
மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். வேல்முருகன், எம். கருணாநிதி, எஸ். அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அனைவருக்கும் குடிமனை பட்டா, நாள்தோறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை முறையாக அமல்படுத்தி, முழு சம்பளம் வழங்க வேண்டும். புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்கு சாலை சந்திப்பு வரை சோடியம் விளக்கு அமைக்க வேண்டும். நியாய விலைக்கடையில் அனைத்து பொருள்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தை உடனடியாக தொடங்க வேண்டும். தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எ. அன்பழகன், எ. கணேசன், ஆர். ராஜகுமாரன், வட்டக்குழு உறுப்பினர்கள் பி. முத்துசாமி, ஜெ. கஜேந்திரன், பி. கிருஷ்ணசாமி, ஆர். முருகேசன், பி. ரெங்கராஜ், வி. காமராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலர் எ.சுபா. தங்கராஜி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ. கலையரசி, பி. ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், பாரதி, சதாசிவம், கோவிந்தன், ரெங்கநாதன், பூமாலை, சையது இப்ராஹீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.