பெரம்பலூர் : செந்துறை அருகே வியாபாரிக்கு ரூ.5ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்கிட தபால்அதிகாரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பெரியார் நகர் சேர்ந்தவர் மலைராஜா என்கிற ஆல்வின் ராஜா (வயது47). பாத்திர வியாபாரி.
இவர் ஒரு வழக்கு தொடர்பான ஆவணங்களை புதுடெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு 17.10.2010 அன்று 320 கிராம் எடையுள்ள பதிவுத்தபால் அனுப்பி இருந்தார். அத்துடன் இணைத்து அனுப்பி இருந்த ஒப்புகை சீட்டு ஒருவாரம் கழித்து புதுடெல்லியில் இருந்து மீண்டும் மலைராஜாவின் முகவரிக்கு திரும்பி வந்தது.
ஆனால் ஒப்புகை சீட்டில் பதிவு தபாலை பெற்றதற்கான அத்தாட்சியாக கையொப்பமும், சீலும் இல்லை. பதிவு தபால் உரிய முகவரிக்கு சேர்ந்ததா? இல்லையா? என்று மலைராஜாவிற்கு உறுதிப்பட தெரியவில்லை.
தபால்துறையின் சேவைக்குறைபாட்டினால் மனஉளைச்சல் அடைந்த மலைராஜாபெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், திருச்சி தலைமை தபால்அதிகாரி, செந்துறை, அண்ணாநகரில் உள்ள தபால் அலுவலக துணை தபால்அதிகாரி உள்ளிட்ட 2 பேர் மீதும் வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொன்ட குழுவினர் விசாரித்தனர்.
வழக்கு நிறைவில் மனுதாரர் மலைராஜாவை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய தபால்துறையினரின் சேவை குறைபாடு காரணமாக, ரூ.5 ஆயிரம் இழப்பீட்டுத்தொகையும், வழக்கு செலவினத்திற்காக ரூ.2ஆயிரமும் வழங்குமாறு திருச்சி தலைமை தபால்அதிகாரி, செந்துறை, அண்ணாநகரில் உள்ள தபால் அலுவலக துணை தபால்அதிகாரி ஆகியோருக்கு உத்திரவிட்டனர்.