பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழையை சேர்ந்தவர் சரத்குமார் (30). இவரது மனைவி மகேஸ்(25). இவர்களுக்கு சத்தீஸ்(3), அகஷ்டின் என்கிற 9மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு தங்கள் வீட்டில் சரத்குமார், மகேஸ் ஆகிய இருவரும் 2 குழந்தைகளுடன் தூங்கினார்கள். இன்று காலையில் தூங்கி எழுந்து பார்த்த போது குழந்தை அகஷ்டின் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சரத்குமார் தனது குழந்தையை காணவில்லை என அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு போலீசார் விசாரனையில் முன்விரோதம் காரணமாக சரத்குமாரின் அக்கா அஞ்சலையின் கணவர் செந்துறையை சேர்ந்த செல்வராஜ் நள்ளிரவில் வந்து கைக்குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர், போலீசார் செந்துறை சென்று குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.