பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
அரும்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி, கடந்த 30 ஆம் தேதி குடியழைத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 31 ஆம் தேதி மாரியம்மனுக்கு பால்குடம், பொங்கல், மாவிளக்கு பூஜைகளும், செப். 1 ஆம் தேதி பெரியசாமி கோயிலுக்கு பொங்கல், மா விளக்கு பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து, 2 ஆம் தேதி ஸ்ரீ அங்காளம்மன், பெரியாண்டவர் கோயிலுக்கு பொங்கல் மா விளக்கு பூஜையும், 3 ஆம் தேதி திருக்கல்யாணமும், 4 ஆம் தேதி ஸ்ரீ தர்மராஜா, திரௌபதி அம்மனுக்கு பால் குடம், பொங்கல், மா விளக்கு பூஜையும், 5 ஆம் தேதி கிருஷ்ணர் தூது விழாக்கோலமும், ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று மாலை தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து, அரும்பாவூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.
இதில், அரும்பாவூர் பேரூராட்சித் தலைவர் சோலை. ராமசாமி மற்றும் பூலாம்பாடி, மலையாளப்பட்டி, அ.மேட்டூர், தழுதாழை, தொண்டைமாந்துறை, பெரியம்மாபாளையம், கொட்டரக்குன்று, கோரையாறு, விஜயபுரம், வெங்கலம், அய்யர்பாளையம், பூஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
மஞ்சள் நீராட்டு, குடிவிடுதல் நிகழ்ச்சியுடன் நாளை விழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ப. கௌதமன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.