பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மயிலூற்று அருவிக்கு மேல் உள்ள ஆனைக்கட்டி அருவியிலிருந்து இன்று தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால், பெரம்பலூர் அருகேயுள்ள மயிலூற்று அருவியில் நீர் கொட்டுகிறது. இந்நிலையில், இந்த அருவியில் குளிப்பதற்காக அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று குளிக்கச் சென்றனர்.
அப்போது, மயிலூற்று அருவிக்கு மேல் உள்ள மற்றொரு அருவியான ஆனைக்கட்டி அருவிக்கும் அந்த இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, சக்களத்தி பாறை அருகே அருவியிலிருந்து அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சங்கர் (25), (பொறியியல் பட்டதாரி) அங்குள்ள 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதையறிந்த அவரது நண்பர்கள், வெகுநேரம் தேடியும் கிடைக்காததால் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நிலைய அலுவலர் தி.மதியழகன் தலைமையிலான 10 தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அருவி மற்றும் அதன் சுற்றியுள்ள வனப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகிவிட்டதால் அடர்ந்த வனப்பகுதிக்குள் இளைஞரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை அதிகாலை இளைஞரை மீட்டு விடுவோம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
200 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் பாறை இடுக்கு மற்றும் மரக்கிளைகள் எங்காவது சிக்கிக்கொண்டுள்ளாரா என இன்று இரவு மலையடிவாரத்தில் முகாமிட்டு தீயணைப்பு துறையினர் தீவிர தேடி வருகின்றனர்.