பெரம்பலூர்: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் (பொ) மீனாட்சி தலைமையில் இன்று நடந்தது.
விழாவில் தமிழக வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 363 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 30 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியதவியுடன் 1,452 கிராம் தங்கம் வழங்கி பேசியதாவது:
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கி வேலைவாய்ப்பு உடனடியாக கிடைக்க தமிழக முதல்வர் வழி செய்துள்ளார்.
2023 தொலைநோக்குதிட்டத்தை உருவாக்கி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றி வருகின்றார்.
பெண்கள் கட்டாயம் கல்வி கற்கச்செய்ய முதல்வரின் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் படித்த ஏழைப்பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் தலா 4 கிராம் தங்கம் 3,273 பேருக்கு எட்டு கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், 13,092 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் தலா 4 கிராம் தங்கமும் 1,555 பயனாளிக்கு ஏழு கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் 6,220 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மட்டும் படித்த ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் தலா 4 கிராம் தங்கம் 205 பயனாளிகளுக்கு 51 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 820 கிராம் தங்கமும், பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு 50 ஆயிரம் நிதியுதவியும் தலா 4 கிராம் தங்கம் 158 பயனாளிக்கு 79 லட்சம் ரூபாய் நிதியுதவியும் 632 கிராம் தங்கமும் என மொத்தம் இன்று மட்டும் 63 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 30 லட்சத்த 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் 1,452 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 5,191 ஏழைப்பெண்களுக்கு ரூ.17.26 கோடி நிதியுதவியுடன் 20,764 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.பி.,க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ.,க்கள் தமிழ்ச்செல்வன், துரைமணிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள், நகராட்சி தலைவர் ரமேஷ், துணை தலைவர் ராமச்சந்திரன், யூனியன் சேர்மன்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் பங்கேற்று செய்தி சேகரித்துக்கொண்டிருந்தனர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் வைத்திலிங்கம் பேசிவிட்டு, பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நிருபர்களை பார்த்து போட்டோ எடுத்ததுபோதும் போங்கையா ஆல்பமா போடப்போறீங்க என காட்டத்துடன் அமைச்சர் பேசினர். இதனால் அதிர்ச்சியடைந்த நிருபர்கள் கூட்டரங்கிலிருந்து வெளியில் சென்றனர். ஆனால், நடந்த அரசு விழாவில் அதிகாரிகள் முறையாக ஒன்றியம் ஒருங்கினைப்பு செய்யததால் கடுப்பான அமைச்சர் அரசு அதிகாரிகளை தட்டி கேட்டால் தலைமையில் புகார் கொடுத்து சிக்கலை உண்டாக்குவார்கள், போராட்டம் செய்வார்கள் என பயந்து, பக்கத்தில் உள்ள நிருபர்களிடம் பாய்ந்தார்.