ஆக்ரா: இந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்த 109 பேர் ஆக்ராவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறைவாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலைய நடைமேடை, ஓடுபாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் உட்பட ரயில்வே சொத்துகள் மீது பான் பராக் போட்டு துப்புவதும், குப்பைகளை போடுவதும் வழக்கமாக உள்ளது. மேலும் கழிப்பறை இருந்தபோதும் பிற இடங்களில் சிறுநீர் கழிப்பதும் உண்டு.
இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற அவலங்களைப் பார்த்து கோபமடைந்த ரயில்வே துறையின் ஆக்ரா பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கோபேஷ்நாத் கண்ணா, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன்படி ஆக்ரா கோட்டத்துக்குட்பட்ட 12 ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 48 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது, மது அருந்தியது, ரயிலின் ஜன்னல் வழியாக எச்சில் துப்புதல், குழந்தைகள், பெண்கள் முன்னிலையிலேயே சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்ட 130 பேர் பிடிபட்டனர். இவர்களுக்கு 24 மணி நேர சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.