பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட 212 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வேப்பந்தட்டை, அரும்பாவூர், வெங்கலம், வாலிகண்டபுரம் ஆகிய பயிற்சி மையங்களில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கல்வி சார்ந்த செயல்திட்டங்களை மேம்படுத்துதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியினை அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அதிகாரி கணேசன் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பயிற்சியில் குழந்தைகளின் கற்றல் தொடர்பான அடைவு நிலை, ஆசிரியர்கள் மனப்பான்மை, தரக் கண்காணிப்பு முறைகள், குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படும் அடைவு தேர்வு மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கல்வி சார்ந்த செயல் திட்டங்கள் மேம்படுத்துதல் குறித்த பயிற்சியளிக்கப்பட்டது.
இதில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.