நகரத்தார் பெண்களை அமைச்சர் செல்லூர் ராஜு தரம் தாழ்ந்து விமர்சித்ததாக குற்றம்சாட்டியுள்ள அந்த சமூகத்தினர், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர். ரஜினி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்க தலைவர் ரங்கநாதன், பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர் சுவாமி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது; ஆச்சி என்ற சொல் நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் வழக்கில் உள்ள சொல் என்ற நிலையில் காரைக்குடி ஆச்சியை ரஜினி பிடிக்கலாம் என்று கூறுவது நகரத்தாரை புண்படுத்தும் பேச்சு என்றனர். ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல் என்ற அவர்கள், அத்தகைய பெண்களை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம் என ஒரு அமைச்சர் பேசியிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்தனர்.அவர் இதற்க்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சென்னைவாழ் புதுவயல் நகரத்தார் சங்கம் ஆவண்ணா தெக்கூர் நகரத்தார் சங்கம், நெற்குப்பை நகரத்தார் சங்கம்,கோனாப்பட்டு நகரத்தார் நலச்சங்கம், தேவகோட்டை நகரத்தார் சங்கம்,வேந்தன்பட்டி நகரத்தார் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதி நிதிகள் செய்தியாளர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்
அமைச்சர் மன்னிப்பு கோரினார்,
இந்நிலையில இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ நகரத்தார் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் தாம் அவ்வாறு பேசவில்லை என்றும் அந்த சமுதாயத்தினர் மனம் புண்பட்டதை அறிந்து தாம் மன்னிக்கு கோருவதாகவும் கூறியுள்ளார். .