பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக நிறுவப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி திறந்து வைத்தார்.
எல்காட் நிறுவனமானது பொது சேவை மையங்களை மாவட்டந்தோறும் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொது சேவை மையம் மூலம் நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கமாகும்.
இச்சேவை மையத்தின் மூலம் வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணநிதி உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித்திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்த வரை 67 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமும், அரசு கேபிள் டி.வி மூலம் 4 வட்டாச்சியர் அலுவலகங்களிலும் பொது சேவை மையங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இதன் மூலம் இதுவரை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, எல்காட் கிளை மேலாளர் தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.