பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த பெண் 2 மகன்களுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சக்கரை ஆலை சின்னாறு பகுதியை சேர்ந்த சிவராஜ் (38). இவர், எறையூரில் உள்ள திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி (34). இவர்களுக்கு வசந்த் (16), தினகரன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்நலையில், திருமண மண்டபத்தின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பகுத்தறிவு, மீனா ஆகியோர் சிவராஜ், அவரது மனைவி செல்வமணியிடம் பிரச்னைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்த செல்வமணி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மகன்களுடன் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
இதையறிந்த, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும், அரசு அலுவலர்களும் செல்வமணி மற்றும் அவரது குழந்தைகளை காப்பாற்றினர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.