பெரம்பலூர்: ஜனவரி 12-ம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருதுகளை பெற தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹதது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஒவ்வொரு வருடமும் ஜனவரி திங்கள் 12-ம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் ( 15 வயது முதல் 29 வயது வரையிலான) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதினை பெற இளைஞர் (தனி நபர்)களுக்கு – குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் வயது 15-லிருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் இந்த ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
மத்திய, மாநில, பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்க இயலாது. இளைஞர் தனிநபருக்கான விருது ரூ.40,000- ரொக்கம், பதக்கம் 25 நபர்களுக்கு மட்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் – சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்க கூடாது.
குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இதற்கு முன் இவ்விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 3 நகல்களுடன் கருத்துருக்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் 05.09.2015-க்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in , மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்கும். அவ்வாறு மாவட்டக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட கருத்துருக்கள் மாநில குழுவில் வைக்கப்பட்டு, அக்குழுவினரால் பரிந்துரைக்கும் கருத்துருக்கள் மைய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.