கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்: கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை : பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்ட பள்ளிகள் அனைத்தையும் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இது மறைந்த தலைவருக்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும்.
மத்திய அரசு பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தை பின்பற்றும் தமிழ்நாட்டு பள்ளிகள், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தான் முறையானதாக இருக்கும். அது தான் அப்துல்கலாமுக்கு செய்யப்படும் மரியாதையாகவும் இருக்கும். இதுகுறித்து அரசு பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, ‘‘முன்னாள் குடியரசுத் தலைவர் மறைவுக்கு பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடும் வழக்கம் இல்லை; ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு விடுமுறை விடப்படவில்லை’’ எனக் கூறியுள்ளார்.
கடந்த கால வழக்கம் எப்படி இருந்தாலும், அப்துல்கலாம் மறைவு ஒப்பீடுகளைக் கடந்து தனித்து பார்க்கப்பட வேண்டும். அப்துல்கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர்.
இந்தியாவில் வேறு எந்த தலைவர்களும் செய்யாத அளவுக்கு லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்று உற்சாகப்படுத்தியவர். தனது கடைசி மூச்சைக் கூட மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது நிறுத்தியவர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செலுத்த விதியை காரணம் காட்டி முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.
ஒருவேளை அப்துல்கலாம் மறைவுக்கு விடுமுறை இல்லையெனில் அதை தமிழக அரசு முன்கூட்டியே தெளிவு படுத்தியிருக்கலாம். அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று நேற்று இரவிலிருந்தே ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அதை நம்பி மாணவர்களும், பெற்றோரும் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
ஊடகங்களில் செய்தி வெளியானபோதே அந்த செய்தியை மறுத்து உண்மை நிலையை அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
அதேநேரத்தில், நள்ளிரவுக்கு பிறகு பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக இன்று பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி திறக்க வைத்துள்ளனர். இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான பள்ளிகளில் கலாமின் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்கப் படவில்லை. அப்துல் கலாமை அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை பா.ம.க. கண்டிக்கிறது. என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.