சென்னை: வாக்குப் பதிவை வெப்காமிரா மூலம் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 230 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 230 வாக்குப்பதிவு மையங்களில் 22 பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்.கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதிவான வாக்குகள் வரும் 30-ம் தேதி எண்ணப்படுகின்றன.
ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட ஜெயலலிதாவுக்கு இங்கு ஓட்டுரிமை கிடையாது. ஜெயலிதாவின் பெயர் ஆயிரம் விளக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது.
இதேபோல இன்னொரு வேட்பாளரான டிராபிக் ராமசாமிக்கும் வேறு தொகுதியான தி.நகரில் உள்ளதால் அவரும் கூட இன்றைய இடைத் தேர்தலில் வாக்களிக்க இயலாது.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனின் பெயரும் தி.நகர் சட்டசபைத் தொகுதியிலேயே உள்ளதால், அவரும், இந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரும் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலிதா உள்பட 3 முக்கிய வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இவர்களுக்காக மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.