பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று திடீராய்வு மேற்கொண்டார். காசநோய்ப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மருந்துகளின் இருப்பு குறித்தும், மருத்துவமனையில் உள்ள கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
காசநோய்பிரிவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வைக்கப்பட்டுள்ள துரித இரத்தப்பரிசோதனை கருவியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்தக் கருவியானது அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் இரத்த மாதிரியை சோதனை செய்ய பெரிதும் பயன்படக்கூடியதாகும். சராசரியான கருவிகள் மூலம் இரத்தத்தில் உள்ள கிருமிகளை கண்டுபிடித்து வகைப்படுத்த சுமார் 72 மணி நேரமாகும். இந்த காலகட்டத்திற்குள் அவரச சிகிச்சையளிக்கபட வேண்டிய நோயாளிக்கு இரத்தத்தில் கிருமிகள் இருப்பின் அதை கண்டுபிடிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த இரத்தப்பரிசோதனை கருவியின் மூலம் 6 மணி நேரத்திற்குள் இரத்தத்தில் உள்ள கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்படும்.
இத்தகைய சிறப்புமிக்க இந்தக்கருவியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதன் செயல்பாடு குறித்தும், நோயாளிகளுக்கு பயனுள்ள வகையில் இக்கருவியின் செயல்பாடு இருக்கிறதா என்றும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர்.சிவசிதம்பரம், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மருத்துவர்.உதயகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.