பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி நேற்றிரவு உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் நந்தீஸ் (13). இவர், லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் மகன் ஹரீஸ் (8). இவர், பெரங்கியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியில் ஓடும் வெள்ளாறில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றபோது மாணவர்கள் இருவரையும் தண்ணீர் அடித்துச் சென்றது.
இதனிடையே, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அவர்கள் இருவரையும் ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் உதவியுடன் ஆற்றில் தேடிய நிலையில், லப்பைகுடிகாடு ஆற்றங்கரையில் ஒதுங்கிய நந்தீஸ், ஹரீஸ் ஆகியோரின் உடல்கள் நள்ளிரவு 2 மணிக்கு மீட்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவர்களின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ஹரீஸ் தந்தை ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.