பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசு பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பஸ் நேற்று இரவு 7 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் பிரிவு ரோடு அருகே சென்றுக்கொண்டிருந்தது, அப்போது ஆலத்தூர்கேட் பிரிவு ரோட்டின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திலுள்ள கிரஷரை நோக்கி சென்ற டிராக்டர் ஒன்று, பிரிவு ரோட்டில் வளைந்தபோது பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் டிராக்டர் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த பெரம்பலுர் அருகே உள்ள புதுவேலூர் கிராமத்தை சேர்ந்த சுப்ராயன் மகன் வெள்ளைச்சாமி,41, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இத்தகவலறிந்த பாடாலூர் போலீஸார் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.