பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற அடையச் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பளவில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட 36 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பால்பண்ணை அமைக்க கடந்த ஜுலை .15 ம் தேதி தமிழக முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய பால்பண்ணைக்கான கட்டுமானப்பணிகள் உடனடியாக துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த கட்டுமானப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்ட, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது கட்டுமானப் பொறியாளர்களிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். கட்டுமானப் பணிகளுக்கு தேவையான உதவிகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து ஆலத்தூர் ஒன்றியத்தின் சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் ஒரு கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது மைய பயன்பாட்டிற்கான கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு ஆயத்த ஆடை தொழில் துவங்க விருப்பமுள்ளவர்களிடம் கோரிக்கைகளை பெற்று, அரசு விதிகளுக்குட்பட்டு ஆயத்த ஆடை தயாரிக்கும் வகையில் இக்கட்டடம் பயன்படுத்தப்படவுள்ளது.
இக்கட்டடத்திற்கான கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், குறித்த காலத்திற்குள் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதிதாசன், முரளிதரன், உதவிப் பொறியாளர் லதா, பாடாலூர் ஊராட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.