பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தினை நேற்று (02.06.2015) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தினையும், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனையொட்டி ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன்,
சிதம்பரம் தொகுதி எம்.பி., சந்திரகாசி,பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளரும், பால்வளத்துறை இயக்குநருமான என்.கே.கர்ணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செல்வி கர்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஒன்றிய சேர்மன் வெண்ணிலாராஜா, வட்டாட்சியர் மகாராஜன், ஊராட்சித்தலைவர்கள் ஆலத்தூர் ஸ்டாலின், பாடாலூர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.