சென்னையில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பொதுமக்களும், தன்னார்வலர்களும், தாங்களாக முன் வந்து பல்வேறு நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தற்போது மழை குறைந்து வெள்ள நீர் வடிய தொடங்கியதை முன்னிட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல, மெல்ல திரும்பி வருகின்றது. இவ்வேளையில் மக்களுக்கு தொற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏதும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், சிறப்பு மருத்துவ முகாம்களையும் தமிழக அரசு செய்து வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தின் இந்திய மருத்துவ கழகத்தின் மூலமாக சார்பாக மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருந்து பொருட்களும், பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கங்கள் மூலமாக முதல் தவணையாக ரூ.30,000 மதிப்பிலான மருந்துப்பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமதுவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான போர்வை, நைட்டி, கைலி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் தலைமையாசிரியர்கள் ஜெயராமன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் வழங்கினர். இப்பொருட்கள் உடனடியாக மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வழியாக ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் மரு.செங்குட்டுவன், செயலாளர் மரு.கதிரவன், பொருளாளர் மரு.புவனேஸ்வரி,மூத்த மருத்துவர் பால்ராஜ், பெரம்பலூர் மாவட்ட மருத்துவ வணிகர்கள் சங்க தலைவர் சவுகத்அலி, செயலாளர் கோவிந்தராஜ், மரு.அரவிந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.