புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஆய்வை உயர் அதிகாரிகள் இரண்டாவது நாளாக புறக்கணித்தனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து மாநிலத்தில் அரசின் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். அதிகாரிகளும் இவரது ஆய்வில் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில், மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் என தீர்ப்பு வெளியானது. இது புதுச்சேரி மாநிலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நேற்று கிரண்பேடியின் ஆய்வை அதிகாரிகள் புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் கிரண்பேடி ஆய்வு செய்தார். இதனை அரசு உயர் அதிகாரிகள் புறக்கணித்தனர்.