பெரம்பலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருப்பிட பயிற்சி முகாம கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் மே.13 வரை 15 நாட்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் 29 மாணவர்களும், 31 மாணவியர்களும் மொத்தம் 60 நபர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தங்கும் இடமும், உணவும், ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு சாந்தி கைப்பந்து பயிற்றுநராகவும், அலெக்ஸாண்டர் தடகள பயிற்றுநராகவும், அதியமான் வாலிபால் பயிற்றுநராகவும், கோபி கால்பந்து பயிற்றுநராகவும், செந்தில் கூடைப்பந்து பயிற்றுநராகவும், கிருபாகரன் பேட்மின்டன் பயிற்றுநராகவும் பணியாற்றினார்கள்.
பயிற்சியின் நிறைவு நாளான நேற்று 13 ஆம் தேதி இம்முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சீருடைகளை வழங்கி பாரட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கருணாநிதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.