Elavarasan Suicide Case Judgement : Blamers can ask to apologize PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை :

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் கூறியிருக்கிறது. விசாரணை ஆணையத்தின் இத்தீர்ப்பு பல ஆண்டுகளாக கட்டவிழ்க்கப்பட்டு வந்த கதைகளுக்கு முடிவு கட்டியுள்ளது.

தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என இருமுறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில், தி இந்து குழுமத்தின் பிரண்ட்லைன் இதழ் இதுகுறித்த விவரங்களை சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

தருமபுரி மருத்துவமனையில் இரு முறை செய்யப்பட்ட இளவரசனின் உடற்கூறு ஆய்விலும் ‘‘வேகமாக சென்ற தொடர்வண்டியின் பக்கவாட்டுப் பகுதி மோதியதில் அவரது இடதுகையில் காயம் ஏற்பட்டிருக்கலாம்; தலையில் தொடர்வண்டி மோதியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார்’’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார்.

மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும் தான் அவரது உள் உறு-ப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய வேறு பொருட்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சிங்காரவேலு, இது சந்தேகத்திற்கிடமின்றி தற்கொலை தான் என்று கூறியுள்ளார்.

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் காவல்துறையினர் மீது கூறப்பட்ட அவதூறுகளை கண்டித்துள்ள நீதியரசர் சிங்காரவேலு, சம்பவம் நடந்த போது தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க்கின் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார். நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க. மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது.

இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. திமுகவில் தொடங்கி இப்போது அதன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன. தங்களின் அரசியல் பசியை தீர்த்துக் கொள்ள இளவரசனின் மரணம் தான் அவர்களுக்கு உணவாக மாறியது.

பாட்டாளி மக்கள் கட்சி மீது பழிச்சொல் எனும் அம்புகளை அடுக்கடுக்காக வீசினார்கள். ஊடகங்களும் இந்த விஷயத்தில் உண்மையைக் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. மாறாக, அரசியல் கட்சிகளின் பழிகளுக்கு தப்புத்தாளங்களைப் போட்டன. தி இந்து உள்ளிட்ட பெரும்பாலான பத்திரிகைகள் நடுநிலையை நசுக்கி விட்டு, பொய்யை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தின. மொத்தத்தில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் புதிய போலி புரட்சியாளர் வேடம் கட்டி ஆடின.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?

இளவரசன் தற்கொலையை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் சாதியை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் சில கும்பல்களுக்கும், அவர்களை திரைமறைவிலிருந்து இயக்குபவர்களுக்கும் இருந்ததே தவிர இளவரசனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் இளவரசனை அவர்கள் பலி கொடுத்திருக்க மாட்டார்கள்; வாழ வைத்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்துவதே பெரும் சுமையாக மாறி விட்ட நிலையில், தமக்கு சென்னையில் ஏதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி தமது சமுதாய அரசியல் தலைவரிடம் இளவரசன் மன்றாடியுள்ளார்.

ஆனால், இளவரசன் வாழ்வதை விட அவரை வைத்து தாம் வாழ வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்த அந்த தலைவர், இளவரசனை வைத்துக் கொண்டு தமக்குத் தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் திட்டி விரட்டியடித்தார். அப்போது தான் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தலைதூக்கியது. உடனடியாக அந்தத் தலைவரின் அலுவலகத்திலிருந்து தாம் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்து தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகும் இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் தான் இருந்துள்ளார். இது அவரை இயக்கிய பலருக்கு தெரிந்து இருந்திருக்கிறது. இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், தற்கொலையை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அது குறித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை திட்டத்தைக் கைவிட்டு விட்டு வீடு திரும்பும்படி, அறிவழகன் என்ற உறவினர் தொலைபேசியில் கேட்டுக் கொண்ட போது, தாம் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதாகவும், இந்த நிலையில் தம்மால் வீட்டுக்கு வர இயலாது என்றும் கூறியிருக்கிறார். அதன்பின்னர், சில மணி நேரங்கள் கழித்து தான், அவர் தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொண்டார் என்ற போதிலும், அவரை காப்பாற்ற அவரது உறவினர்களோ, நண்பர்களோ முயற்சி செய்யவில்லை. இளவரசனின் தற்கொலை காவல்துறையினருக்கு தெரியும் முன்பாகவே அவரது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இளவரசனின் மறைவுக்காக வருந்தவில்லை; மாறாக அவரிடம் இருந்த தற்கொலைக் கடிதம் உள்ளிட்ட ஆதாரங்களை களைந்து, இளவரசன் கொலை செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் தான் ஆர்வம் காட்டினர். அந்த நேரத்தில் அவரை இயக்கியவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு துணையாக இருப்பதைப் போல நடித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக உண்மையை மறைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்துவதை கைவிட்டு நேர்மையான அரசியல் செய்ய முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!