பெரம்பலூர் : சாலை விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(27) என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி அவரது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் செஞ்சிப்பட்டி செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த அரசுப்பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில், கால் முறிவு மற்றும் கை நரம்புகள் துண்டிக்கப்பட்ட சுரேஷ் இழப்பீடு கோரி பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி விபத்திற்கு காரணமான கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழகம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 847 ரூபாய் சுரேசுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இழப்பீடு தொகை சுரேஷ்சுக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அதில், விபத்தில் பாதிக்கப்பட்ட சுரேஷ்சுக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து 3 லட்சத்து 36 ஆயிரத்து 381 வசூல் செய்து வழங்கிட சம்மந்தப்பட்ட கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி டி.எஸ்.நந்தகுமார் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்ல தயாராக இருந்த அரசுப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.