விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.
பெரம்பலூர் : பெரம்பலூரில், உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ரோட்டரி மற்றும் ரோட்ராக்ட் சங்கங்கள் சார்பில், உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி பேசியது:
ஏதேனும் விபத்தில் சிக்கியோ அல்லது உடல்நலக்குறைவால் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம், அவர்கள் மற்றவர்களின் உருவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தான் இறந்தாலும், மற்றவர் வாழக் காரணமாக அமைவார்கள். எனவே, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று காமராஜர் வளைவில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் பங்கேற்ற சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இதில், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாள கே. வரதராஜன், மீனா டிரேடர்ஸ் சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காவல் துறையினர் ஊர்வலத்திற்கு போதிய பாதுகாப்பும், போக்குவரத்தையும் சீர் செய்து கொடுத்தனர்.