10% reservation for upper caste poor: plot to root out social justice Vaiko condemned

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர், வைகோ விடுத்துள்ள அறிக்கை:

காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் வாழ்க்கையில் விடியலின் வெளிச்சத்தைக் காண வழி வகுத்துதான் சமூக நீதிக்கொள்கை ஆகும்.

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு சமூக நீதித் தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

நேற்று ஜனவரி 8 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன 124 ஆவது சட்டத் திருத்த முன்வடிவு, மோடி அரசின் மோசடியை அம்பலப்படுத்தி இருக்கின்றது.

மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு 16.11.1992 இல் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13(1), 15(4), 16(4), 29(2) உள்ளிட்டவற்றில் ‘பொருளாதாரத்தில் ஏழ்மை’ என்று எந்த இடத்திலும் இல்லை. இதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டித்தான் பி.வி.நரசிம்மராவ் அரசு, “உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் ஆணை செல்லாது” என்று ரத்து செய்து திட்டவட்டமான தீர்ப்பை அளித்து இருக்கின்றது.

இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக 1951 இல் தமிழ்நாட்டில் போராடியதன் விளைவாக, பிரதமர் நேரு அமைச்சரவையில் இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களால், 29.05.1951 இல் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் முன்மொழியப்பட்டது.

அரசியல் சட்ட விதி 15இல் 15(4) என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இனத்தவருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இணைக்கப்பட்டது.

அப்போதே அரசின் சட்டப் பிரிவு 15(4) இல் பொருளாதார அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சிலர் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் நேரு அவர்களும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நிராகரித்துவிட்டனர். பொருளாதார அளவுகோல் என்பது அவ்வப்போது மாறக்கூடியது என்றும், அதனை ஏற்க முடியாது என்றும் முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே வரையறை செய்யப்பட்டுவிட்டது.

தற்போது பா.ஜ.க. அரசு உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்று சட்ட முன்வடிவு கொண்டு வந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, இடஒதுக்கீட்டு கோட்பாட்டையே சீர்குலைக்கும் சதி வலைப்பின்னல் என்பதை எவரும் மறுக்க முடியாது.

மண்டல் குழு குறித்து, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வில் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் சமூக நீதியின் உயிர் தன்மையைக் காக்க வேண்டும் என்றும், பொருளாதார வசதியை அளவுகோலாக எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்க இயலாது என்றும் தீர்ப்பு அளித்ததை நாம் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்.

1991 இல் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது உயர்சாதி ஏழைகளுக்கு தனியே 10% இடஒதுக்கீடு அளிக்க ஆணை கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றம் அதை இரத்து செய்தபின்னரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 15 ஆண்டுகளுக்கு முன்பு உயர்சாதி ஏழைகளுக்கு 14% இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தது. அப்போது அவரது கட்சியினரே எல்லா சாதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு என்று கூறி. அதனால் அதிக விகிதத்தில் இட ஒதுக்கீடு செய்து அதை அப்படியே மேல்சாதியினர் ஏழைகள் என்ற பெயரில் சுருட்டிக்கொள்ள கோரிக்கை வைத்தனர்.

அதே நிலையை பா.ஜ.க. அரசும் உருவாக்க முனைந்துள்ளது.

இந்தியாவில் ஆளும் வர்க்கமாக உள்ள மேல் சாதியினரில் 10% பேர் ஏழைகள் இருக்கலாம். ஆனால் மேல் சாதிகளில் எழுத்தறிவு அற்ற ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ இல்லை.

பிற்படுத்தப்பட்டோரில் 40 பேர் ஏழைகள். இவர்களில் 100க்கு 25 ஆண்களும், 100க்கு 50 பெண்களும் இன்றும் எழுத்தறிவு பெற இயலாமல் உள்ளனர் என்பதுதான் உண்மை நிலை.

பட்டியல் வகுப்பினரில் 100க்கு 60% பேர் ஏழைகள். இவர்களில் 100க்கு 50 ஆண்களுக்கும், 100க்கு 70 பெண்களுக்கும் இன்றும் எழுத்தறிவு இல்லை. பழங்குடியினருக்கும் இதைவிட இழிவான நிலை.

காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட சாதிகளுக்கு வேலைவாய்ப்பில் இன்றும் விகிதாச்சார இடம் கிடைக்கவில்லை. மேல் சாதியினர் ஏழை உட்பட அனைவரும் கல்வி பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பிலும் அவர்களின் விகிதத்தைப் போல் பத்து மடங்கு அதிகமாகப் பெற்றுள்ளனர்.

‘மதிப்பெண் தகுதி’ என்று கூறிக்கொண்டு வாய்ப்புக்களை அள்ளிக் கொண்டோர் இப்போது ஏழை என்றும் கூறி கீழ் சாதி ஏழைகளுக்கு உரியதையும் பறித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள்.

மேலும் பொருளாதார நிலை ஒரே குடும்பத்தில்கூட மாறி, மாறி அமைந்திருக்கும். எனவே அதை அளவுகோலாக வைப்பது சமூக நீதியை புதைகுழிக்கு அனுப்பும் மோசடி முயற்சியாகும்.

பா.ஜ.க. அரசின் இத்தகைய சதித்திட்டத்திற்கு சமூகநீதி கோட்பாட்டில் உறுதிகொண்ட சில கட்சிகளும் துணை போவது என்பது மிகுந்த வேதனை தருகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் சனாதன கூட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு. மோடி அரசின் 124ஆவது அரசியல் சட்டத்திருத்த முன்வடிவை அனைத்துக் கட்சிகளும் மாநிலங்கள் அவையில் எதிர்த்து வாக்களித்து பா.ஜ.க. அரசின் சமூக அநீதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!