பெரம்பலூர்: மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, நடனப் போட்டி உள்ளிட்ட கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி பேசியதாவது:
சிறுசேமிப்பு நம் நாட்டையும், வீட்டையும் பாதுகாக்கிறது. சேமிக்கும் பழக்கம் அனைவரிடமும், அனைத்து குடும்பங்களிலும் தோன்றவேண்டும். சிறுசேமிப்பு பழக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டும். இந்த இலட்சிய நோக்கோடு செயல்பட்டால், நமது மாவட்டத்தின், மாநிலத்தின், நாட்டின் அனைத்து வளர்ச்சி பணிகளையும் செம்மையாக, முழுமையாக நிறைவேற்ற முடியும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிமும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுடன், அவசியமற்ற செலவுகள் தவிர்க்கப்பட்டு அனைவரும் தங்களின் வருவாயை பாதுகாப்பாகவும், நிரந்தரமாகவும் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, தங்கள் வாழ்வில் மேலும் வளம் காண முயற்சிக்கவேண்டும். இந்த எண்ணத்தை மாணவர்களாகிய நீங்கள்தான் உங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் எடுத்துக்கூறி அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் , அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் (8வது) வெளியீடு, தேசிய சேமிப்புப் பத்திரம் (9வது) வெளியீடு , 15 ஆண்டு பொது சேமநல நிதி திட்டம், அஞ்சலக கால வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட் சிறுசேமிப்பு திட்டங்கள் மத்திய அரசாங்கத்தால் அஞ்சலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் தங்களுக்கு உகந்த சிறுசேமிப்பு திட்டங்களில் அருகில் உள்ள அஞ்சலகங்களில் முதலீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன், என பேசினார்.
பின்னர், பள்ளிகளுக்கிடையே 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை மற்றும் 11 முதல் 12ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 33 மாணவ, மாணவிகளுக்கு சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி, பரிசுப்புத்தகங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) அருண்மொழி, சிறுசேமிப்பு கள அலுவலர் செந்தில் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.